சமாஜவாதி கட்சியின் அனைத்து அமைப்புகளும் கலைப்பு: அகிலேஷ் யாதவ் அதிரடி

உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் அனைத்து அமைப்புகளையும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஒட்டுமொத்தமாக வெள்ளிக்கிழமை கலைத்தார். எனினும், கட்சியின் மாநில தலைவர் நரேஷ் உத்தமை
சமாஜவாதி கட்சியின் அனைத்து அமைப்புகளும் கலைப்பு: அகிலேஷ் யாதவ் அதிரடி


உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் அனைத்து அமைப்புகளையும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஒட்டுமொத்தமாக வெள்ளிக்கிழமை கலைத்தார். எனினும், கட்சியின் மாநில தலைவர் நரேஷ் உத்தமை மட்டும் அவர் நீக்கவில்லை.
இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பிடிஐ செய்தியாளர்களிடம் கூறுகையில், சமாஜவாதி கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என அனைவரும் பதவிநீக்கம் செய்யப்பட்டனர். இளைஞர் அமைப்புகள் உள்பட அனைத்து நிர்வாக அமைப்புகளையும் அகிலேஷ் யாதவ் கலைத்து விட்டார். எனினும், கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை அகிலேஷ் யாதவ் கலைக்கவில்லை. மாநிலத் தலைவர் நரேஷ் உத்தம் அந்தப் பதவியில் அப்படியே தொடர்வார். அனைத்து அமைப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவர் என்றார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு அடுத்த நாளில், கட்சியின் அனைத்து செய்தித் தொடர்பாளர்களையும் அகிலேஷ் பதவி நீக்கம் செய்தார். தற்போது, அனைத்து நிர்வாக அமைப்புகளையும் கலைத்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே சமாஜவாதி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து அக்கட்சி போட்டியிட்டது. எனினும், அகிலேஷின் எந்த உத்திகளும் பலனளிக்கவில்லை. இந்த முறையும் வெறும் 5 இடங்களில் மட்டுமே சமாஜவாதி கட்சி வெற்றி பெற்றது. அதிலும், அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவும் தேர்தலில் தோல்வியைத் தழுவியது, அக்கட்சிக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.  
இந்நிலையில், 2022-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, கட்சியை மறுசீரமைக்கும் நோக்கத்தில் அனைத்து நிர்வாக அமைப்புகளையும் அகிலேஷ் யாதவ் அதிரடியாக கலைத்து விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com