ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு: விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு
ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு: விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
அதுவரை ப.சிதம்பரத்தைக் கைது செய்ய அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளபோதும், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்பான மேல்முறையீடு மீது எதுவும் தெரிவிக்கவில்லை. 
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தன்னைக் கைது செய்வதற்கு எதிராக முன்ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன்ஜாமீன் அளிக்க அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதை ஆராய்ந்த தில்லி உயர்நீதிமன்றம், அவரது மனுவைக் கடந்த 20-ஆம் தேதி நிராகரித்தது. 
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க கடந்த 21-ஆம் தேதி உச்சநீதிமன்றம் மறுத்ததையடுத்து, அன்றிரவு சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, தில்லியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, ப.சிதம்பரத்தை வரும் 26-ஆம் தேதி காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், ப.சிதம்பரம் தன்னைக் கைது செய்யத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆதாரங்கள் உள்ளன: அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:
பணமோசடி வழக்குகளிலேயே இது மிகவும் முக்கியத்துவமான வழக்காகும். மனுதாரர் (ப.சிதம்பரம்) பணமோசடியில் ஈடுபட்டு, உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகள் பலவற்றிலும் சட்டவிரோதமாக சொத்துகளைச் சேர்த்து வைத்துள்ளார். அதற்கான ஆதாரங்களை அமலாக்கத் துறை சேகரித்துள்ளது. 
இந்த வழக்கில் அரசுத் தரப்பு அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி பல முக்கியத் தகவல்களை சிபிஐயிடம் தெரிவித்துள்ளார். அவரும், அவரது கணவர் பீட்டர் முகர்ஜியும், தங்களது நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் (எஃப்ஐபிபி) ஒப்புதலைப் பெறுவதற்காக சிதம்பரத்தைச் சந்திக்கச் சென்றுள்ளனர். அதற்குக் கைமாறாக, தனது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு உதவுமாறு சிதம்பரம் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை சிபிஐ பதிவு செய்துள்ளது.
போலியாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பல கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களைப் பெறுவதற்கு மனுதாரரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியமாகும். எனவே, அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக் கூடாது.
சிபிஐ அதிகாரிகளால் மனுதாரர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவரை வரும் 26-ஆம் தேதி காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதன் காரணமாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் வரும் திங்கள்கிழமை வரை அவரைக் கைது செய்ய முடியாது. எனவே, அமலாக்கத் துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றார் துஷார் மேத்தா.
ஒருபக்கச் சார்பில்...: மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர், மனுதாரரைக் கைது செய்வதற்குத் தடை விதிக்க வேண்டுமென வாதிட்டனர். அப்போது அவர்கள், மனுதாரரைக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி அளித்துள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தனியாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளோம். மனுதாரருக்கு முன்ஜாமீன் அளிக்கும் விவகாரத்தில், அமலாக்கத் துறை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை அப்படியே நகலெடுத்து நீதிமன்றம் தனது உத்தரவில் வழங்கியுள்ளது. எங்கள் தரப்பு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் போதிய காலஅவகாசம் அளிக்கவில்லை என்றனர்.
விசாரணை ஒத்திவைப்பு: இரு தரப்பு வாதங்களையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபர் (கார்த்தி சிதம்பரம்) பிணையில் இருப்பதைக் கருத்தில் கொண்டோம். அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மனுதாரரை (ப.சிதம்பரம்) அமலாக்கத் துறையினர் கைது செய்யக் கூடாது. இது தொடர்பாக வரும் 26-ஆம் தேதிக்குள் அமலாக்கத் துறை பதிலளிக்கலாம். வழக்கின் விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கிறோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com