பதற்றமான சூழல் இருந்தாலும் கர்தார்பூர் வழித்தடத்தை திறக்கத் தயாராக உள்ளோம்: பாகிஸ்தான்

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவில் பதற்றம் நிலவினாலும், கர்தார்பூர் வழித்தடத்தை திறக்கத் தயாராகவே உள்ளோம். கர்தார்பூருக்கு சீக்கியர்களை வரவேற்கிறோம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.


ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவில் பதற்றம் நிலவினாலும், கர்தார்பூர் வழித்தடத்தை திறக்கத் தயாராகவே உள்ளோம். கர்தார்பூருக்கு சீக்கியர்களை வரவேற்கிறோம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. 
பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்காக ஆப்கானிஸ்தான் எம்.பி.க்கள், அதிகாரிகள் அடங்கிய குழு வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத் வந்தது. அந்தக் குழுவினருடனான பேச்சுவார்த்தையின்போது பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி மேற்கண்டவாறு கூறியுள்ளார். 
இதுதொடர்பாக அவர் மேலும் பேசியதாவது: 
இந்தியாவுடனான உறவில் பதற்றம் நிலவினாலும், கர்தார்பூர் வழித்தட விவகாரத்துடன் அதை தொடர்புபடுத்த விரும்பவில்லை. கர்தார்பூர் வழித்தடத்தை திறக்கத் தயாராகவே உள்ளோம். பாபா குரு நானக்கின் 550-ஆவது பிறந்த தின கொண்டாட்டத்துக்காக கர்தார்பூருக்கு சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்கிறோம். 
அதேவேளையில், இந்தியாவுடனான பதற்றமான சூழல் எந்த விதத்திலும் ஆப்கானிஸ்தானுடனான பாகிஸ்தானின் உறவை பாதிக்காது. ஆப்கானிஸ்தானுடனான எல்லை மூடப்படாது; வர்த்தகமும் நிறுத்தப்படாது. நரேந்திர மோடியின் முரண்பட்ட நடவடிக்கைகளுக்காக ஆப்கானிஸ்தான் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? 
இந்தியாவுடனான உறவில் பதற்றம் நிலவினாலும், ஆப்கானிஸ்தானுடனான உறவில் பாகிஸ்தான் கவனமுடன் செயல்பட்டு வருகிறது. காஷ்மீர் விவகாரம் மிகப்பெரிய கவனச் சிதறலாக இருந்தாலும், ஆப்கானிஸ்தானுடனான உறவில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். 
ஆப்கானிஸ்தானுடன் நல்லுறவையும், அதனுடன் இணைந்து செயல்படுவதையுமே பாகிஸ்தான் விரும்புகிறது. ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அந்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களோடு இணைந்து பணியாற்றுவோம் என்று ஷா மெஹ்மூத் குரேஷி கூறினார். 
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் சீக்கிய மதத்தை தோற்றுவித்த பாபா குரு நானக்கின் குருத்வாரா உள்ளது. அங்கு இந்திய சீக்கிய யாத்ரீகர்கள் பயணிக்கும் விதமாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருதாஸ்பூரில் இருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு சிறப்பு வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தை இந்தியா-பாகிஸ்தான் அரசுகள் இணைந்து அமைத்து வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com