Enable Javscript for better performance
ஜேட்லிக்கு பல்வேறு தலைவர்கள் புகழஞ்சலி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஜேட்லிக்கு பல்வேறு தலைவர்கள் புகழஞ்சலி  

    By DIN  |   Published On : 25th August 2019 01:26 AM  |   Last Updated : 25th August 2019 07:44 AM  |  அ+அ அ-  |  

    arunjetly

     

    பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லியின் மறைவுக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரும், வழக்குரைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    பாஜக மூத்த தலைவர் அத்வானி: ""எனது மற்றொரு நெருங்கிய சகாவை இழந்ததில் பெரும் துயருற்றுள்ளேன். சட்டத்துறையில் புலமை பெற்று விளங்கிய அவர், மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும், சிறந்த நிர்வாகியாகவும் விளங்கினார். பாஜகவின் தொண்டராக பல ஆண்டுகள் இருந்துள்ளார். நான் பாஜக தலைவராக இருந்தபோது, கட்சியின் வியூகங்களை வகுக்கும் குழுவில் இணைந்த அவர், வெகு சீக்கிரத்தில் கட்சியின் முக்கியப் பொறுப்புகளை வகித்தார். பாஜகவுக்கு முக்கியப் பிரச்னைகள் நேரும்போது, கட்சியிலுள்ள அனைவரும் தீர்வுக்காக அவரையே சார்ந்திருப்போம். அரசியல் வேறுபாடின்றி நட்பு பாராட்டியவர் ஜேட்லி. உணவு விரும்பியான அவர், சிறந்த உணவகங்களை எனக்குப் பரிந்துரைக்க என்றும் மறந்ததில்லை''.

    உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்: ""அருண் ஜேட்லியின் மறைவு, எனக்குத் தனிப்பட்ட இழப்பாகும்''.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: ""பொது வாழ்க்கையில் நீண்ட காலமாக ஈடுபட்டவர் அருண் ஜேட்லி. நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் அவர் ஆற்றிய பணிகள், மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம்பெற்றிருக்கும்''.

    முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி: ""ஆழ்ந்த அறிவாற்றல் பெற்று விளங்கிய அருண் ஜேட்லி, மற்ற அரசியல் தலைவர்களுக்கு சிறந்த உதாரணமாகவும் விளங்கினார்''.

    சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: ""அருண் ஜேட்லியின் மறைவு, நாட்டுக்கும், அரசியலுக்கும், சட்டத்துறைக்கும் ஏற்பட்ட பெரும் இழப்பாகும். சட்டத்துறையில் சிறந்த புலமை பெற்று விளங்கிய அவர், எதிர்க்கட்சியினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அறிவுரைகளை வழங்கியுள்ளார்''.

    மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால்: ""சிறந்த வழக்குரைஞராகவும், அரசியல் தலைவராகவும் விளங்கிய ஜேட்லி, பாஜகவுக்கு ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்ததில் முக்கியப் பங்காற்றியவர். அவரது மறைவு நாட்டுக்கு மட்டுமல்லாமல், சட்டத்துறைக்கும், அரசியலுக்கும் பெரும் இழப்பு''.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்: ""எனது நண்பரின் மறைவு வருத்தத்தைத் தருகிறது. கட்சிரீதியாக வேறுபட்டிருந்த போதிலும், எங்களுக்குள் பரஸ்பர மரியாதை இருந்துவந்தது. ஜேட்லி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, கருத்துமிக்க விவாதங்களை மேற்கொண்டுள்ளோம். அவரது மறைவு நாட்டுக்குப் பெரும் இழப்பு''.

    ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்: ""ஜேட்லியின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது''.

    பிகார் முதல்வர் நிதீஷ் குமார்: ""சிறந்த வழக்குரைஞராகவும், மத்திய அரசில் பல்வேறு துறை அமைச்சராகவும் பணியாற்றிய திறன் கொண்டவர் ஜேட்லி. அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்பட்ட அரசியல் தலைவர் அவர்''.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: ""மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும், வழக்குரைஞராகவும் விளங்கியவர் ஜேட்லி. அரசியலில் பொது மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்''.

    ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்: ""சட்டத்தில் ஆழ்ந்த புலமையும், சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் விளங்கியவர் ஜேட்லி. அரசியல் நிர்வாகத்தில் அவரது பங்களிப்புகள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை''.

    மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்: ""ஜேட்லி போன்ற திறமையான நபர் இல்லாமல் போயிருந்தால், சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) நடைமுறைப்படுத்தியிருக்க முடியாது. அவர் எப்போதும் ஊக்கமளித்துக்கொண்டே இருப்பார்''.

    தமிழக முதல்வர் எடப்பாடி, கே. பழனிசாமி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்குரைஞருமான கபில் சிபல் உள்ளிட்டோரும், பல்வேறு வழக்குரைஞர்கள் சங்கங்களும் ஜேட்லியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp