"ககன்யான்' திட்டம்: ரஷிய விண்வெளி ஆய்வு மையத்தில் 4 இந்திய வீரர்களுக்கு பயிற்சி

விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் "ககன்யான்' திட்டத்துக்காக, ரஷியாவின் விண்வெளி ஆய்வு மையத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் "ககன்யான்' திட்டத்துக்காக, ரஷியாவின் விண்வெளி ஆய்வு மையத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
 இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்காஸ்மோஸின் தலைமை இயக்குநர் டிமிட்ரி ரோகோஸினை, மாஸ்கோவில் கடந்த 21-ஆம் தேதி சந்தித்து பேச்சு நடத்தியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக, "ராஸ்காஸ்மோஸ்' வெளியிட்ட அறிக்கையின்படி, ரஷியாவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
 இதுதொடர்பான ஒப்பந்தம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் (இஸ்ரோ), ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் அங்கமான கிளாவ்காஸ்மோஸுக்கும் இடையே கடந்த ஜூன் 27-ஆம் தேதி கையெழுத்தானது.
 ககன்யான் திட்டத்துக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்து, சோதித்து, அவர்களுக்குப் பயிற்சியளித்து தகுதிப்படுத்த கிளாவ்காஸ்மோஸ் உதவுகிறது.
 மேலும், ககன்யான் திட்டத்துக்காக வழங்கப்படவுள்ள விண்வெளி வீரர்களுக்கான உடை, விண்வெளி ஓடத்தில் பொருத்தப்படும் இருக்கைகள், அதில் பொருத்தப்படும் கண்ணாடிகள் தொடர்பாக இந்தியா-ரஷியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 விண்வெளிப் பயணத்துக்குப் பிறகு பூமிக்குத் திரும்பும் வீரர்கள் குழுவை மீட்பதற்கான கட்டமைப்பு, வீரர்களை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டுக்கான சோதனை முறைகள் ஆகியவை தொடர்பான தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்வது குறித்த ஒப்பந்தங்கள் ஆகஸ்ட் இறுதிக்குள்ளாக மேற்கொள்ளப்படவுள்ளது. செயற்கைகோள் வழிகாட்டுதல், இயந்திர தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பாகவும் ரஷியா-இந்தியா இடையே ஆலோசனை நடத்தப்பட்டது.
 மருத்துவர்களுக்கு பயிற்சி:
 ககன்யான் திட்டத்தில் பங்கேற்கும் இந்திய விண்வெளி மருத்துவக் குழுவுக்கான பயிற்சியை பிரான்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான "சிஎன்இஎஸ்' வழங்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு, பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின்போது வெளியிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com