கடலோரப் பகுதிகளில் உஷார் நிலையில் கடற்படை: பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, கடலோரப் பகுதிகளில் கடற்படை வீரர்கள் உஷார் நிலையில் உள்ளனர்.
கடலோரப் பகுதிகளில் உஷார் நிலையில் கடற்படை: பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, கடலோரப் பகுதிகளில் கடற்படை வீரர்கள் உஷார் நிலையில் உள்ளனர்.
 இதனை கேரள மாநிலம், கொச்சியில் பாதுகாப்புத் துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தார். கேரள மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுமாறு மாவட்ட காவல்துறைத் தலைவர்களுக்கு அந்த மாநில காவல் துறை டிஜிபி லோக்நாத் பெஹேரா உத்தரவிட்டுள்ளார்.
 தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்கும் நோக்கத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்துக்குள் நுழைந்துள்ளதாகவும், இந்தக் குழுவில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர், மற்ற 5 பேரும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் எனவும் தமிழக காவல் துறை டிஜிபிக்கு மத்திய உளவுத் துறை வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
 "பயங்கரவாதிகள், ஹிந்து மத அடையாளங்களைத் தரித்து மாறுவேடங்களில் நடமாடத் திட்டமிட்டுள்ளனர். இக்குழுவினர் தற்போது கோவையில் தங்கியுள்ளனர். அதில் ஒருவரது பெயர் இலியாஸ் அன்வர் எனத் தெரியவந்துள்ளது' என்றும் உளவுத் துறை தகவல் தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கோவையில் பாதுகாப்பு கூடுதலாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
 மாநகரக் காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவுப்படி, கண்காணிப்பைத் தீவிரப்படுத்த அதிவிரைவுப் படை போலீஸார், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, மாநகர போலீஸார் என 2 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். புறநகரங்களில் இருந்து மாநகருக்குள் நுழையும் 10-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் கார், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தீவிரச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கோவை மாநகரில் உள்ள விடுதிகளில் போலீஸார் விடியவிடிய தீவிர சோதனை மேற்கொண்டனர்.
 கோவையில் கோனியம்மன் கோயில், இஸ்கான் கோயில், ஈச்சனாரி, புரூக்பீல்டு, சரவணம்பட்டி புரோசோன்மால், ரயில் நிலையம், ரெட்பீல்டு, சாய்பாபா காலனி உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் அதிவிரைவுப் படை போலீஸார் துப்பாக்கிகளுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
 வெளியூர்களில் இருந்து கோவைக்கு வந்த விரைவு, அதிவிரைவு ரயில்கள், விமானங்களில் பயணிகளின் உடைமைகள், பார்சல்களில் மோப்ப நாய்களைக் கொண்டு கமாண்டோ படை வீரர்கள் தீவிர சோதனை நடத்தினர்.
 இருவரிடம் விசாரணை: தமிழகத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் உதவி செய்வதாகக் கிடைத்த தகவலின் படி, கோவையில் இருந்து தனிப்படை போலீஸார் திருச்சூருக்கு சனிக்கிழமை விரைந்தனர். அங்கு, அப்துல் காதர் வீட்டில் அவரது பெற்றோர் மட்டுமே இருந்தனர். அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இலங்கைக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவராகக் கருதப்படும் அப்துல் காதரிடம் செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு பேசியதாக கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜாஹிர், கேரளத்தைச் சேர்ந்த சித்திக் ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து கோவை, காருண்யா நகர் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில் சித்திக் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது. கேரளம் செல்வதற்காக சனிக்கிழமை கோவை வந்தபோது போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
 கொச்சியில் ஒருவர் கைது: இதற்கிடையே லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த அப்துல் காதர் ரஹீம் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com