நிரந்தரத் தலைநகர் இல்லாத ஆந்திர மாநிலம்

சென்னை மாகாணத்தில் இருந்து கடந்த 1953-ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி நாட்டின் முதல் மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது முதல், ஆந்திர மாநிலம் நிரந்தரத் தலைநகரம் இல்லாத மாநிலமாக தவித்து வருகிறது.
நிரந்தரத் தலைநகர் இல்லாத ஆந்திர மாநிலம்

சென்னை மாகாணத்தில் இருந்து கடந்த 1953-ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி நாட்டின் முதல் மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது முதல், ஆந்திர மாநிலம் நிரந்தரத் தலைநகரம் இல்லாத மாநிலமாக தவித்து வருகிறது.
 ஆந்திர மக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த ஆந்திரம், நாட்டின் முதல் மொழிவாரி மாநிலமாக கடந்த 1953-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி பிரிக்கப்பட்டு, தனி மாநிலமாக உருவானது.
 ஆந்திர மாநிலம் ஏற்படுத்தப்பட்ட பின், ராயலசீமா பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கர்னூலை மாநிலத் தலைநகராகக் கொண்டு ஆந்திர மாநிலம் நாட்டின் முதல் மொழிவாரி மாநிலம் என்ற பெருமையுடன் செயல்பட்டு வந்தது.
 இந்நிலையில், தெலுங்கு பேசும் மக்கள் பெருவாரியாக இருக்கும் மற்றொரு மாநிலமாக அப்போது வரை இருந்த தற்போதைய தெலங்கானா மாநிலமும் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு, கடந்த 1956-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி ஆந்திர பிரதேச மாநிலம் அமைக்கப்பட்டபோது, ஹைதராபாத் ஆந்திர பிரதேசத்தின் தலைநகரமானது.
 கடந்த 2014 ஜூன் மாதம் ஆந்திரம், தெலங்கானா மாநிலப் பிரிவினைக்குப் பின்னர், ஆந்திர முதல்வர் ஆன சந்திரபாபு நாயுடு குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவித்து ஆட்சி நடத்தி வந்தார்.
 அமராவதிக்கு எதிர்ப்பு: அமராவதியை ஆந்திர மாநிலத் தலைநகரமாக சந்திரபாபு நாயுடு விடுத்த அறிவிப்புக்கு அப்போதைய மாநில எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.
 இந்நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.
 தொடர்ந்து, அக்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றார்.
 சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக இருந்த 5 ஆண்டுகாலத்தில் அவருடைய முழு கவனமும் தலைநகர் அமராவதியை அபிவிருத்தி செய்வதிலேயே இருந்தது. ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரான பின் தலைநகர் அமராவதியில் நடைபெற்று வந்த அபிவிருத்தி பணிகள் அனைத்தும் முடங்கின.
 மக்களின் வரிப்பணம் விரயம்: இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் நகராட்சிகள் மற்றும் நகரங்கள் அபிவிருத்தித் துறை அமைச்சர் சத்யநாராயணா விஜயவாடாவில் அளித்த பேட்டி ஒன்றில், தலைநகர் அமராவதி பாதுகாப்பான பகுதி கிடையாது.
 அமராவதிக்கு வெள்ள ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அமராவதியில் நடைபெறும் தலைநகர கட்டுமானப் பணிகளுக்கு ஒன்றுக்கு இரண்டாகச் செலவு செய்யும் நிலை உள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் விரயமாகிறது.
 எனவே ஆந்திர மாநிலத்துக்கு வேறு ஒரு தலைநகரை தேர்வு செய்யும் பணி பற்றிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. புதிய தலைநகரம் எது என்பது குறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விரைவில் அறிவிப்பார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
 3 தலைநகரம் கண்ட ஆந்திரம்: ஆரம்பத்தில் சென்னை மாகாணமாக இருந்து, பின்னர் கர்னூல், அடுத்து ஹைதராபாத், மூன்றாவதாக அமராவதி என்று இதுவரை மூன்று தலைநகரங்களைப் பார்த்த ஆந்திர மாநிலம், தற்போது நான்காவது தலைநகரத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது.
 திருப்பதியை தலைநகராக்கக் கோரிக்கை: ஆந்திர அமைச்சரின் புதிய அறிவிப்பு காரணமாக, மாநிலத்தில் இருக்கும் பல்வேறு பகுதியினரும், ஆந்திரத் தலைநகரைத் தங்கள் பகுதிக்கு கொண்டு வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 இதனால், ஆந்திர மாநிலத்தின் அடுத்த தலைநகர் எது என்பது குறித்து முதல்வரின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை ஆந்திரத்தில் புதிய தலைநகரம் அமைப்பது குறித்த போராட்டங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
 இந்நிலையில், திருப்பதி மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் சிந்தா மோகன், பல்வேறு வகையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய திருப்பதியை ஆந்திரத்தின் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com