மேற்கு வங்க பேரவை இடைத் தேர்தல்: இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி அமைக்க சோனியா காந்தி ஒப்புதல்

மேற்கு வங்கத்தில் விரைவில் நடைபெற உள்ள மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட
மேற்கு வங்க பேரவை இடைத் தேர்தல்: இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி அமைக்க சோனியா காந்தி ஒப்புதல்

மேற்கு வங்கத்தில் விரைவில் நடைபெற உள்ள மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 மேற்கு வங்க சட்டப் பேரவையில் தற்போது மூன்று இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் காளியாகஞ்ச் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரûஸச் சேர்ந்த பரமார்த்தநாத் ராய் இறந்ததால் அந்த இடம் காலியானது. அதேபோல், கரக்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், மேதினிபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, எம்எல்ஏ பதவியை ராôஜிநாமா செய்தார். கரீம்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் மஹுவா மொய்த்ரா, கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியில் இருந்த எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இந்த இருவரின் ராஜிநாமாவால் கரக்பூர், கரீம்பூர் தொகுதிகள் காலியாக உள்ளன.
 இந்நிலையில், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ராவுடன் அக்கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந்தி தில்லியில் வெள்ளிக்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்த மூன்று தொகுதி இடைத்தேர்தல் குறித்தும், கட்சி விவகாரங்கள் குறித்தும் அவர் விவாதித்தார். இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
 மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் முடிவை மாநில காங்கிரஸ் தலைமை எடுத்தது. ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தபோது இம்முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி காளியாகஞ்ச் மற்றும் கரக்பூர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். கரீம்பூர் தொகுதியில் இடதுசாரி முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும்.
 மேற்கு வங்கத்தில் பாஜகவின் எழுச்சியைத் தடுக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் அண்மையில் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட சோனியா ஒப்புதல் அளித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. சோனியாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் நல்லுறவு உள்ளபோதிலும், கூட்டணிக்கு இடதுசாரிகளை அவர் தேர்வு செய்துள்ளார்.
 இதற்கு, வரும் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் அரசை எதிர்த்தே போட்டியிட வேண்டியிருக்கும் என்பதும் ஒரு காரணமாகும். எனவே, பாஜகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எங்களால் திரிணமூல் காங்கிரஸுடன் அணிசேர்ந்து விட முடியாது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
 இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. எனவே, பேரவை இடைத் தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட அக்கட்சி முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே, மேற்கு வங்கத்தில் கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன. எனினும், இந்தக் கூட்டணியால் திரிணமூல் காங்கிரஸின் அமோக வெற்றியைத் தடுத்து நிறுத்த முடிய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com