அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: முதலிடத்தில் இருக்கும் மாநிலம் இதுதான்!

பீகார் மாநிலத்தில் ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்கள் - ஆசிரியர் விகிதம் 38 ஆகவும், அதைத்தொடர்ந்து இரண்டாம் இடத்தில் டெல்லியில் 35ஆகவும் இருக்கிறது.
அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: முதலிடத்தில் இருக்கும் மாநிலம் இதுதான்!


நமது நாட்டில் அனைத்து குழந்தைகளும் அடிப்படை கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கில் தான் அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி அடிப்படை உரிமையாக வைக்கப்பட்டுள்ளது. ஏழைக்குடும்பத்தில் உள்ள குழந்தைகளும் படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

நாடு முழுவதுமே அரசுப்பள்ளிகளை நம்பி வாழும் குடும்பங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வாறு இருக்க, பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இருக்கிறார்களா? என்றால் ஒரு சில மாநிலங்களில் மோசமாக உள்ளது என்று தான் கூற வேண்டும். மாணவர்கள் - ஆசிரியர் விகிதம் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதிகாரிகள் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். 

கல்வி உரிமைச் சட்டம், 2009ன் படி, தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர்கள் - ஆசிரியர் விகிதம்(பி.டி.ஆர்) வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்கள் - ஆசிரியர் விகிதம் 30:1 என்ற அளவிலும், மேல்நிலைப்பள்ளிகளில் 35:1 என்ற விகிதத்திலும் இருக்க வேண்டும். 

ஆனால், பீகார் மாநிலத்தில் ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்கள் - ஆசிரியர் விகிதம் 39 ஆகவும், அதைத்தொடர்ந்து இரண்டாம் இடத்தில் டெல்லியில் 34ஆகவும் இருக்கிறது. அதேபோன்று பீகாரில் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் - ஆசிரியர் விகிதம் 38 ஆகவும், டெல்லியில் 35ஆகவும் இருக்கிறது. 

இதன்மூலம் மாணவர்கள் - ஆசிரியர் விகிதம் மோசமாக உள்ள மாநிலங்களில் பீகார் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பீகார் மாநிலத்தில் 67.94% ஆரம்பப் பள்ளிகள் மற்றும் 77.86% மேல்நிலைப்பள்ளிகள், சரியான மாணவர்கள்- ஆசிரியர் விகிதத்தை கொண்டிருக்கவில்லை.

அதைத்தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தில் 50.28% தொடக்கப்பள்ளிகள் மற்றும் 64.24% மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் -ஆசிரியர் விகிதம் சரியாக இல்லை. இதன்மூலம், பீகாரில் சராசரியாக 70% பள்ளிகளில்   மாணவர்களுக்கான ஆசிரியர்கள் இல்லை என்பது அதிர்ச்சியாகவே உள்ளது.  

அதே நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை கணக்கிடும் போது, 26.45% ஆரம்பப் பள்ளிகள் மற்றும் 31.07% மேல்நிலைப்பள்ளிகள் போதுமான மாணவர்கள்- ஆசிரியர் விகிதத்தினை கொண்டிருக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 'பள்ளிக்கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமான 'சமக்ர சிக்ஷா' என்ற திட்டத்தை மத்திய அரசு 2018-19ல் அறிமுகப்படுத்தியது, இது முந்தைய திட்டங்களான சர்வ சிக்ஷா அபியான், ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷா அபியான் மற்றும் ஆசிரியர் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியது.

சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மாணவர்கள்-ஆசிரியர் விகிதத்தை சரிசெய்ய மத்திய அரசு உதவுகிறது. தேவைப்படும் இடங்களில் ஆசிரியர்களை நிரப்புகிறது. ஆசிரியர்கள் குறைவாக உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விரைந்து ஆசிரியர்களை நிரப்புதல் உள்ளிட்ட பணிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது' என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com