சோனியாவின் தொகுதிக்கு அருண் ஜேட்லியின் கடைசிப் பரிசு!

சோனியாவின் தொகுதிக்கு அருண் ஜேட்லியின் கடைசிப் பரிசு!

மறைந்த மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஜேட்லி, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு 200 சோலார் விளக்குகளை பரிசாக அளித்துள்ளார். 

மறைந்த மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஜேட்லி, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு 200 சோலார் விளக்குகளை பரிசாக அளித்துள்ளார். மறைவுக்கு முன்பாக ஜேட்லி   அளித்த கடைசிப்பரிசு இதுவாகும். 

பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி சுவாசப் பிரச்னை, சிறுநீரகப் பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தபோதிலும், அவை எதுவும் பலனளிக்காத நிலையில் சனிக்கிழமை நண்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரதமர், குடியரசுத்தலைவர், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஞாயிற்றுக்கிழமை நிகம் போத் காட் பகுதியில் உள்ள மைதானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 

இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலிக்கு அதிக திறன் கொண்ட 200 சோலார் விளக்குகளை பரிசாக அளித்துள்ளார். ரேபரேலி, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் நாடாளுமன்றத் தொகுதியாகும். 

நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒவ்வொருவரும் எம்.பிக்களுக்கான நிதியின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை செலவழிக்க முடியும். அதன்படி, ஜேட்லி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 200 உயர்திறன் சோலார் விளக்குகளை நிறுவ, ரேபரேலி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினார். இதனை மாவட்ட நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, இந்த விளக்குகளை பொருத்த வேண்டும் என்று ஜேட்லி கோரிக்கை விடுத்திருந்ததால், அதற்கான பணிகளும் தற்போது தொடங்கியுள்ளன. ஜேட்லி ரேபரேலி மாவட்ட நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தில்  ஜூலை 30ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி இந்த திட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலின் போது, ரேபரேலியில் சோலார் விளக்குகள் அமைக்கப்படும் என்றும் புதிய மைதானம் ஒன்றும் அமைக்கப்படும் என்றும் ஜேட்லி வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com