காஷ்மீருக்கு நாளை செல்கிறது சிறுபான்மையினர் அமைச்சக குழு

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் குழு, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கு வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு
காஷ்மீருக்கு நாளை செல்கிறது சிறுபான்மையினர் அமைச்சக குழு

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் குழு, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கு வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து அக்குழுவினர் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். இத்தகவலை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
 காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
 பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த நக்வி இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
 காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நடவடிக்கையை திரும்பப் பெறும் எண்ணம் உள்ளதா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு.
 இந்த அரசின் முடிவுகள் குறித்து அனைத்துத் தரப்பினருக்குமே தெரியும். மிகவும் தீவிரமாக யோசித்து, அலசி ஆராய்ந்துதான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதன் பிறகு அதில் இருந்து பின்வாங்குவது இங்கு இருக்காது. நாட்டு மக்களின் நலனுக்கே முன்னுரிமையளித்து வருகிறோம்.
 சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை திரும்பப் பெற வேண்டும் என்று சிலர் தங்கள் அரசியல் லாபங்களுக்காக பேசி வருகின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் மத்திய அரசின் பக்கம் உள்ளனர்.
 ஜம்மு-காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு அந்த மாநில மக்கள் உள்பட நாட்டு மக்கள் அனைவரும் துணை நிற்கின்றனர். இப்போது முதல்கட்டமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் வளர்ச்சியை ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு, செவ்வாய், புதன்கிழமைகளில் (ஆக. 27,28) அங்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் எந்தெந்த பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள், திறன் மேம்பாட்டு மையங்கள், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள், மருத்துவமனைகள் அமைக்கலாம் என்பது குறித்து அவர்கள் ஆய்வு நடத்துவார்கள். இது தவிர அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் குழுவினர் ஆய்வு நடத்துவர். அடுத்தகட்டமாக, ஜம்மு மற்றும் லடாக் பகுதிக்கும் அதிகாரிகள் குழு பயணம் மேற்கொண்டு தங்கள் ஆய்வைத் தொடர்வார்கள்.
 காஷ்மீரில் பிரிவினைவாத கொள்கை உடையவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் மக்களை பல்வேறு வழிகளில் திசை திருப்பி வருகின்றனர். அவர்களிடம் இருந்து மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு உள்ளது என்றார் நக்வி.
 காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, "காஷ்மீர் பிரச்னை குறித்து உண்மையான நிலையை அறிந்தவர்களும், தேச ஒற்றுமையை விரும்புபவர்களும் நிச்சயமாக மத்திய அரசை ஆதரிப்பார்கள். இந்த விஷயத்தில் மத்திய அரசை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் குறுகிய அரசியல் லாபத்தையே நோக்கமாகக் கொண்டவை. மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்த பிறகு, அவர்களும் கூட மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். காஷ்மீரில் முஸ்லிம்கள், பெளத்தர்கள், சீக்கியர்கள் என சிறுபான்மையினர் அதிகம் வசிக்கின்றனர். எனவே எங்கள் அமைச்சகத்தின் பணி அங்கு அதிகம் தேவை' என்று நக்வி பதிலளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com