ரூ.50 கோடிக்கு மேலான வங்கி நிதி மோசடிகளை விசாரிக்க புதிய குழு: சிவிசி நடவடிக்கை

ரூ.50 கோடிக்கு மேலான வங்கி நிதி மோசடிகளை விசாரிக்க மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (சிவிசி) புதிய குழு ஒன்றை அமைத்துள்ளது. வங்கி நிதி மோசடிகள் ஆலோசனை அமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ள

ரூ.50 கோடிக்கு மேலான வங்கி நிதி மோசடிகளை விசாரிக்க மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (சிவிசி) புதிய குழு ஒன்றை அமைத்துள்ளது. வங்கி நிதி மோசடிகள் ஆலோசனை அமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் குழுவுக்கு சிவிசி முன்னாள் ஆணையர் டி.எம். பாசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 இதற்கு முன்பு வங்கி, வர்த்தக, நிதி நிறுவனங்களின் மோசடி தொடர்பான ஆலோசனை அமைப்பு சிவிசி-யில் இருந்தது. இந்தக் குழுவுக்கு மாற்றாக புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியுடன் (ஆர்பிஐ) நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு இது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது. இந்த புதிய குழுவில் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். பொதுத் துறை வங்கிகளின் பொது மேலாளர் நிலையிலான அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை இக்குழு விசாரிக்கும்.
 சமீபகாலமாக பல்வேறு நிதி மோசடிகளில் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது அதிகரித்து வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகர்புற மேம்பாட்டுத் துறை முன்னாள் செயலர் மதுசூதன் பிரசாத், எல்லைப் பாதுகாப்புப் படை முன்னாள் இயக்குநர் டி.கே.பதக், ஆந்திர வங்கி முன்னாள் தலைவர் சுரேஷ் என்.படேல் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும். இந்த விசாரணைக் குழுவுக்குத் தேவையான பணியாளர்கள், போக்குவரத்து வசதிகளை ஆர்பிஐ அளிக்கும்.
 வங்கி நிதி மோசடி தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே முடிவெடுத்துள்ளது. இதன் அடிப்படையிலேயே இப்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com