காஷ்மீரிலும் ஆதாரை கட்டாயம் ஆக்குகிறதா மத்திய அரசு!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு நீக்கப்பட்டதையடுத்து, மற்ற மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 
காஷ்மீரிலும் ஆதாரை கட்டாயம் ஆக்குகிறதா மத்திய அரசு!


நாடு முழுவதும் உள்ள மக்கள், அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. பின்னர், ஆதார் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக, பான் கார்டு, வருமானவரிக்கணக்கு ஆகியவற்றுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

அதே நேரத்தில், வங்கிக்கணக்கு, செல்போன் சிம் கார்டு, பள்ளி மாணவர் சேர்க்கை ஆகியவற்றிற்கு ஆதார் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசின் சமூக நலத்திட்டங்களுக்கு தனித்துவ அடையாள அட்டையான ஆதார் இருப்பதன் மூலம் போலிகளை களைய முடியும் என்றும் தெரிவித்தது. 

தற்போது காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு நீக்கப்பட்டதையடுத்து, மற்ற மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து (விதி 370) ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் அறிவித்தார்.

மேலும், ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்படுவதாகக் கூறினார்.

இது தொடர்பான தீர்மானம் மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, கடும் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட் 9ம் தேதி குடியரசுத்தலைவரும் இதற்கு ஒப்புதல் அளித்தார். இதனால் தற்போது காஷ்மீர் முழுவதுமாக இந்தியா வசம் வந்துள்ளது என்று கூறலாம். 

முன்னதாக, காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம் என்றாலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் காஷ்மீரில் எடுபடாத நிலையே இருந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கென தனிக்கொடி, தனி அரசியலமைப்பு விதிகள் உள்ளிட்டவை இருந்தன. இந்த நிலையில், தற்போது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, காஷ்மீர் மாநிலத்திற்கும் இந்திய அரசியலமைப்பு விதிகள், மத்திய அரசின் சட்டங்கள் பொருந்தும் நிலை உருவாகியுள்ளது. 

அதன்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக, மற்ற மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்மூலமாக காஷ்மீர் மக்களுக்கும் மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக சென்று சேரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், அம்மாநில மக்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, போலியான தகவல்களும் கண்டறியப்படும். ஆதார் மூலமாக ஒரு நபரின் விரல்ரேகை பதிவு மற்றும் கண்விழிப்படல பதிவு செய்வதன் மூலமாக முறைகேடுகள் தடுக்கப்படும். மத்திய அரசின் திட்டங்களை பெற ஆதார் கட்டாயம் என்ற கோணத்தில் கொண்டுவரும்போது அதனை அம்மாநில மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று கருதப்படுகிறது. 

எனவே விரைவில் காஷ்மீரிலும் ஆதார் கட்டாயமாக்கப்படவுள்ளது. அதிலும் குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இதனை தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்.  

வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் பொது சேவை மையங்களின் மூலமாக இது செயல்படுத்தப்படும். இதற்காக பஞ்சாயத்துகளில் பொது சேவை மையங்களை உருவாக்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் இந்த பணிகள் முடிவடையும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருகிற ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இந்த திட்டம் செயல்படுத்தி முடிக்கப்படும் என்று தனிநபர் அடையாள ஆணையத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் மத்திய அரசின் திட்டங்களை முழுவதுமாக பெற வேண்டும் என்ற நோக்கில் வெற்றித் திட்டமான ஆதார் திட்டம் காஷ்மீரிலும் கொண்டுவரப்படுகிறது என்றும் அவர்கள் விளக்கம் தெரிவித்தனர். 

கிராமப்புறப்பகுதிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா ஜம்முகாஷ்மீரரில் முதல் திட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com