ஜெயிலுக்குச் செல்வேனே தவிர பாஜகவுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன்: மம்தா

ஜெயிலுக்கு போனாலும் போவேனே தவிர, பாஜகவின் இனவாத அரசியலுக்கு தலைவணங்க மாட்டேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜெயிலுக்கு போனாலும் போவேனே தவிர, பாஜகவின் இனவாத அரசியலுக்கு தலைவணங்க மாட்டேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு முதல் அங்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்று, முதல்முறையாக அம்மாநிலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தினை பெற்றுள்ளது. 

இதையடுத்து, அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் காலூன்ற பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அதேபோன்று மம்தா பானர்ஜிக்கும், பாஜகவுக்கும் இடையே தொடர் மோதல் இருந்து வருகிறது. 

இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பதால், சிபிஐ மூலமாக தமது கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாநில அமைச்சர்களை  பாஜக குறிவைத்து தாக்கி வருகிறது என்று மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். 

மேலும், அவர் பேசுகையில், 'பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக நாங்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகிறோம். மேற்கு வங்கத்தை கைப்பற்ற பாஜக முயற்சி செய்து வருகிறது. பாஜகவின் மீதோ அல்லது பாஜகவின் மறைமுக ஏஜென்சிகள் மீதோ எங்களுக்கு எந்த பயமும் கிடையாது. எங்களது குரலை நசுக்க முடியாது.

இன்று எனது சகோதரருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை எனக்கு வரும். அதற்காக நான் என்னை ஏற்கனவே தயார்படுத்திக் கொண்டுள்ளேன். அவ்வாறு ஒரு சூழ்நிலை வந்தால், ஜெயிலுக்கு போனாலும் போவேனே தவிர, ஒருபோதும் பாஜகவின் இனவாத அரசியலுக்கு தலைவணங்க மாட்டேன்' என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

மேலும், நாடு முழுவதும் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாகவே இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் மக்களின் மீது எந்த பொறுப்புமே கிடையாது என்றும் குற்றஞ்சாட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com