
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த 370ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கவுள்ளது.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து, சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீரில் தகவல்தொடர்புகள் முடக்கப்பட்டதுடன், ஊடகங்கள் செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டுப்பாடுகளை நீக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதும் உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கவுள்ளது. இந்த மனுக்களை வழக்குரைஞர் எம்.எல்.சர்மா, தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.பி.க்கள் முகமது அக்பர் லோன், ஓய்வுபெற்ற நீதிபதி ஹஸ்னைன் மசூதி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது தாரிகமியை நேரில் ஆஜர்படுத்தக் கோரி அக்கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் தொடர்புடைய இந்த மனுக்கள் அனைத்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...