
நாட்டில் தரமிழந்த 50 லட்சம் ஹெக்டேர் நிலங்களை 2030-ஆம் ஆண்டுக்குள் வளமிக்கதாக மீட்டெடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல், வன, பருவகால மாற்றம் துறையின் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
நிலங்கள் தரிசாக மாறுவதைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை நாடுகளின் 14-ஆவது உச்சி மாநாடுதில்லி கிரேட்டர் நொய்டாவில் செப்டம்பர் 2 முதல் 13-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தியா சார்பில் நடத்தப்படும் இந்த மாநாடு குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நிலம் தரமிழப்பது என்பது உலகம் முழுவதும் உள்ள ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது. இதன் மூலம் நேரடியாக 25 கோடி பேர் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. புவி நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நிலம் இதுபோன்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்தியாவில் மொத்த நிலப் பரப்பில் 29 சதவீதம் தரமிழந்ததாக உள்ளது. இவை வளமானதாக மீட்டெடுக்கப்பட வேண்டும். அதாவது, தரமிழந்த 50 லட்சம் ஹெக்டேர் நிலங்களை வளமிக்கதாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலாக இந்த விஷயம் இருக்கும். நொய்டாவில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்க வாய்ப்புள்ளது.
இந்த மாநாட்டில் ஏறக்குறைய 200 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். சுமார் 3 ஆயிரம் பிரதிநிதிகளும், 100 சுற்றுச்சூழல் தொடர்புடைய அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், உலகளாவிய வணிக தலைவர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகள், பாலினம் சார்ந்த நிறுவனங்கள், இளையோர், பத்திரிகையாளர்கள் என பல தரப்பினரும் பங்கேற்று தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவுள்ளனர். தரமிழக்கும் நிலங்களை மீட்டெடுக்க அறிவியல் நமக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
நிலத்தை அதிகமாகச் சுரண்டுதல், அதிக மேய்ச்சல், அதிகமாக நீர் தேங்குதல், காற்று போன்ற பல்வேறு காரணிகளால் நிலம் தரம் இழக்கிறது. வெள்ளம் கூட நல்ல நிலத்தை மோசமானாதாக்குகிறது.
எனவே, நாட்டில் உள்ள தரமிழந்த 50 லட்சம் ஹெக்டேர் தரமிழந்த நிலத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் மீட்டெடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் வளமுள்ள நிலமாக மாற்றப்படும். இதற்காக டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த மையம் நிலம் தரமிழப்பதற்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆராயும்.
நிலம் சீரழிவதைத் தடுப்பது என்பது உலகின் பொதுவான தீர்மானமாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அடுத்த இரு ஆண்டுகளுக்கு இந்தியா முன்னெடுத்துச் செல்லும்.
இதற்காக அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் கோருவோம். இந்த உச்சிமாநாட்டில் அனைத்து ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர் என்றார் அமைச்சர் ஜாவடேகர்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கிறார் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர். உடன் இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ.