
கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து ரிசர்வ் வங்கி ஈட்டிய லாபத்தில் 99 சதவீதத்தை மத்திய அரசு கையகப்படுத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: வங்கிகளின் கடைசி புகலிடமாக ரிசர்வ் வங்கி இருந்து வருகிறது. இந்த நிலையில், அதன் கையிருப்பை பயன்படுத்திக் கொள்வது மிகவும் கண்டனத்துக்குரியது.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி ஈட்டிய லாபத்தில் 99 சதவீதத்தை மோடி அரசு அதன் பிரச்சார திட்டங்களுக்காக பயன்படுத்தியுள்ளது. தற்போது அதனை முழுவதுமாக கைப்பற்ற உள்ளது. மோடியின் கூட்டாளிகளால் கொள்ளையடிக்கப்பட்ட வங்கிகளின் மறுமூலதனத்துக்காகவே தற்போது ரிசர்வ் வங்கியிடமிருந்து ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு பெறுகிறது. மோடி ஆட்சியில் பொதுத் துறையில் நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு, அந்த நிறுவனங்கள் மீது மத்திய அரசு நிதிச் சுமையை ஏற்றியதே முக்கிய காரணம் என்று யெச்சூரி தெரிவித்துள்ளார்.