தீவிரவாதத்தை ஒழிக்க பாஜக அரசின் முதல் முயற்சி வெற்றி பெறுமா?

இளைஞர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அந்த வகையில், காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்க பாஜகவின் முதலாவது திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
தீவிரவாதத்தை ஒழிக்க பாஜக அரசின் முதல் முயற்சி வெற்றி பெறுமா?

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக, காஷ்மீரில் ராணுவப்படைகள் குவிக்கப்பட்டன. ராணுவச் சிப்பாய்கள், மத்திய ரிசர்வ் படை போலீசார் உள்ளிட்ட 5 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையே, எல்லையில் ஊடுவிய பாகிஸ்தான் படையினரையும், இந்திய ராணுவப்படை அடித்து விரட்டியது. இதன் காரணமாக, எல்லையிலும் தொடர் பதற்றம் நிலவி வந்தது. ஆனால், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதாக அரசு கூறிவந்தாலும், அங்கு ஒரு சில பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாதது இயல்புநிலை திரும்பாததையே காட்டுவதாக ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. 

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்கவும், அம்மாநில வளர்ச்சிக்காகவுமே, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.  காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் குடும்ப ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், காஷ்மீர் குழந்தைகளுக்கு கல்வி, இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மேலும், ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லையை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, தொழிற்கல்வி ஆகியவற்றில் தனி இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள்:
 

இதன்பின்னர், பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, முதல் அறிவிப்பாக, காஷ்மீர் மாநிலத்தில் அரசுப்பணிகளில் காலியாகவுள்ள  50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக, ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு மையம் ஒன்று உருவாக்கப்படும் என்றும், இந்த வேலைவாய்ப்பில் இளைஞர்கள் பெருவாரியாக கலந்துகொள்ள வேண்டும் என்றும் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். 

தீவிரவாதத்தை ஊக்குவிக்க பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவளித்து வருகிறது. நிதியுதவி அளித்து பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவித்தும் வருகிறது என பல்வேறு உலக நாடுகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன. தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளன. 

தீவிரவாதத்தில் காஷ்மீர் சிறுவர்கள்:

இந்நிலையில், காஷ்மீரில் உள்ள சிறுவர், சிறுமியர்களை தீவிரவாதத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்திய ராணுவத்தினர் மீது கல் வீசி தாக்கும் சிறுவர்களை நாம் புகைப்படங்களில் காண முடிந்தது. கடந்த 2017ம் ஆண்டு ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்த, அந்த மாநில சிறுவர் - சிறுமியரை, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஒரு காஷ்மீர் சிறுவன் அளித்த பேட்டியையும் இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது. சிறுவர்களை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் எல்லையில் தாக்குதல் நடத்துவதாகவும், அதேபோன்று இதில், சிறுவர்கள் பலரை கடத்தப்பட்டு அவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினான். 

மேலும், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், குறிப்பாக, நன்றாக படித்து, உயர்கல்விக்குச் செல்வதற்கு பயிற்சி பெறும் மாணவர்களை குறிவைத்தே பயங்கரவாதிகள் கடத்திச் செல்வதாகவும் கூறப்படுகிறது. 

பாஜக அரசின் யுக்தி:

'இளைஞர்கள் எதிர்கால சந்ததியினர்', 'ஒரு மரத்தை அசைக்க வேண்டும் என்றால் அதன் ஆணிவேரை அசைக்க வேண்டும்'என்ற பாணியில் சிறுவர்கள், இளைஞர்களை பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றனர். 

தற்போது இதேபோன்ற ஒரு யுக்தியை தான் மத்திய பாஜக அரசு பயன்படுத்தவுள்ளதாக தெரிகிறது. அதாவது, இளைஞர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அந்த வகையில், காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்க பாஜகவின் முதலாவது திட்டமாக இது பார்க்கப்படுகிறது. பொருளாதார சூழ்நிலை காரணமாக இளைஞர்கள் தவறான வழிக்குச் செல்வதாக கூறப்படும் நிலையில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இதனை தடுக்கலாம் என்று அரசு கருதியிருக்கலாம். 

மற்றுமொரு முக்கியமான திட்டமாக, காஷ்மீரில் பள்ளத்தாக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவெடுத்து அனைத்து இடங்களிலும் பொது சேவை மையங்களை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. காஷ்மீர் மாநில மக்களின் தனிப்பட்ட விபரங்கள் பதியப்படும் போது இதன் மூலமாக குற்றச் செயல்கள் குறைக்கப்படும் என்றே கருதப்படுகிறது. 

மேற்குறிப்பிட்ட இந்த காரணங்களினாலே, காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்க, பாஜக 'வேலைவாய்ப்பு' என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக பாஜகவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

பாஜக அரசின் இந்த திட்டங்கள் வெற்றி பெறுமா? காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com