கர்தார்பூர் வழித்தடப் பணிகள் எப்போது முடிக்கப்படும்? - அமித் ஷா பதில்!

திட்டமிட்ட காலத்திற்குள் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் வழித்தடப் பணிகள் முடிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 
கர்தார்பூர் வழித்தடப் பணிகள் எப்போது முடிக்கப்படும்? - அமித் ஷா பதில்!


திட்டமிட்ட காலத்திற்குள் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் வழித்தடப் பணிகள் முடிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

சீக்கிய மதத்தை நிறுவியவரும், அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். 

இந்த யாத்திரை மேற்கொள்ளும் சீக்கியர்களுக்கு வசதியாக, பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. கர்தார்பூர் வழித்தடம் எனப்படும் இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.

இதில், குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், மறுபுறம் கர்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைக்க உள்ளன.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீருக்கான விவகாரத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பேருந்து, ரயில் சேவைகளையும் நிறுத்தியது.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் போதிலும், கர்தார்பூர் வழித்தடத் திட்டத்துக்கான தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பாக இந்திய - பாகிஸ்தான் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர். கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில், குருதாஸ்பூரில் இரு நாட்டு எல்லையில் (ஜீரோபாய்ண்ட்) இக்கூட்டம் நடைபெற்றது. 

இதற்கிடையே, சீக்கியர்களின் புனித நூலான 'குரு கிராந்த் சாஹிப்' உருவான  நாளை 'பர்காஷ் புராப்' என சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர். இதையொட்டி இன்று சீக்கியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.

சீக்கியர்களின் இந்த புனித நூலானது, நாடு மேலும் வளர்ச்சியடையத் தேவையான பலத்தை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியளித்தபடி, திட்டமிட்ட காலத்திற்குள் கர்தார்பூர் வழித்தடப் பணிகள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ள வருகிற நவம்பர் மாதம், அந்த வழித்தடத்தை பக்தர்களின் பயன்பாட்டுக்குத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com