என்ஆர்சி விவகாரம்: சோனியா காந்தியுடன் வடகிழக்கு காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் என்ஆர்சி வெளியிடப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியைச் சந்திதுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


அஸ்ஸாம் மாநிலத்தில் என்ஆர்சி வெளியிடப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியைச் சந்திதுள்ளனர். 

அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறிவர்களை கண்டறிவதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் வரைவு அறிக்கை கடந்தாண்டு ஜூலை மாதம் வெளியான நிலையில், அதில் சுமார் 40 லட்சம் மக்களின் பெயர் விடுபட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, என்ஆர்சி வரைவு அறிக்கையில் விடுபட்டவர்களின் பெயர்களை இணைப்பதற்கானப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. 

இதன்முடிவில் இன்று என்ஆர்சி இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சுமார் 19 லட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. 

இந்நிலையில், இதுதொடர்பாக மேகாலயா முதல்வர் முகுல் சங்மா, காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் ஆகியோர் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இன்று அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர்.  

சோனியா காந்தியுடனான இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கௌரவ் கோகோய், 

"என்ஆர்சி விவகாரம் குறித்து சோனியா காந்தியிடம் தெரிவித்துள்ளோம். கட்சியின் மற்ற மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்திய பிறகு, இவ்விவகாரத்தில் முடிவு எடுப்பார்" என்றார். 

இதன்பிறகு, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், 

"என்ஆர்சி விவகாரத்தில் அஸ்ஸாமின் அனைத்து தரப்பு மக்களும் துயரத்தில் உள்ளனர். பாஜக அமைச்சர்களே இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். நிறைய உண்மையான இந்தியக் குடிமக்கள் அவசியமில்லாமல் நீதிமன்றத்தை நாட வேண்டி இருக்கும். பொறுப்பற்ற முறையில் செயல்படுத்தினால் அதன் விளைவு இப்படிதான் அமையும். அரசியலுக்கு அப்பாற்பட்டு தேச நலனே எங்களது பிரதான நோக்கம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

சோனியாவுடனான சந்திப்புக்குப் பிறகு , முகுல் சங்மா தெரிவிக்கையில்,

"இந்த விவகாரத்தில் எங்களது கட்சியின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. உண்மையான குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார். 

இவர்களுக்கு முன், உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், அஸ்ஸாம் காங்கிரஸ் பொறுப்பாளருமான ஹரிஷ் ராவத்தும் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com