காஷ்மீரில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட நிலையில், அங்கு வெள்ளிக்கிழமை சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காஷ்மீ
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை 144 தடை உத்தரவுஅமலில் இருந்த நிலையில், தடுப்பு அரண்களை மீறி செல்ல முயன்றவரைத் தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் படை வீரர்கள்.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை 144 தடை உத்தரவுஅமலில் இருந்த நிலையில், தடுப்பு அரண்களை மீறி செல்ல முயன்றவரைத் தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் படை வீரர்கள்.


சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட நிலையில், அங்கு வெள்ளிக்கிழமை சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காஷ்மீரில் தொடர்ந்து 26-ஆவது நாளாக  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:  
வெள்ளிக்கிழமை தொழுகையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு  மக்கள் வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டன. 
முக்கிய மசூதிகளில் தொழுகைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. காஷ்மீரின் தொலைதூர பகுதிகளில் மட்டும் சில மசூதிகள் திறக்கப்பட்டிருந்தன. அந்தப் பகுதிகளில் தொழுகை அமைதியான முறையில் நடந்து முடிந்தது. எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. சந்தைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
சென்ற வாரம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர், மசூதிக்கு வெளியே சிலர் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். அதைக் கருத்தில் கொண்டு இந்த வாரம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கிய பிறகு, அங்கு கடும் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மத்திய அரசு விதித்தது. காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களும், முன்னாள் முதல்வர்களுமான மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். பிரிவினைவாத தலைவர்கள், மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். தொலைபேசி சேவைகளுக்கும், இணையதளச் சேவைகளுக்கும், செய்தி தொலைக்காட்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் காஷ்மீரில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்தது. தொலைபேசி சேவைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், இணையச் சேவைகளும், செல்லிடப்பேசி சேவைகளும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com