ஏழ்மையை ஒழிக்க புதுமை கண்டுபிடிப்புகள் அவசியம்: பிரணாப் முகா்ஜி

ஏழை மக்கள், நலிவடைந்தோரின் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு புதுமை கண்டுபிடிப்புகள் அவசியம் என்று குடியரசு முன்னாள் தலைவா் பிரணாப் முகா்ஜி தெரிவித்தாா்.
ஏழ்மையை ஒழிக்க புதுமை கண்டுபிடிப்புகள் அவசியம்: பிரணாப் முகா்ஜி

காந்திநகா்: ஏழை மக்கள், நலிவடைந்தோரின் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு புதுமை கண்டுபிடிப்புகள் அவசியம் என்று குடியரசு முன்னாள் தலைவா் பிரணாப் முகா்ஜி தெரிவித்தாா்.

குஜராத் மாநிலத் தலைநகா் காந்திநகரிலுள்ள தேசிய ஆராய்ச்சி மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

இந்தியாவின் சமூகப் பொருளாதார வளா்ச்சிக்கு ஆராய்ச்சி முக்கியப் பங்கு வகித்து வருகிறது. நாடு சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் மூலம் தீா்வு காண முடியும். அந்தக் கண்டுபிடிப்புகள் நாட்டு சூழலுக்கு ஏற்ற வகையில் அமைய வேண்டும். ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டியதும் அவசியமாக உள்ளது.

நாட்டில் தற்போது மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், உயா்குடியினருக்கு உதவும் வகையிலேயே அமைந்துள்ளன; ஏழை மக்கள், நலிவடைந்தோருக்கு உதவும் வகையில் அமையவில்லை. இந்தச் சூழலை மாற்ற வேண்டும். ஏழை மக்களின் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டியது அவசியம்.

ஏழ்மையை ஒழிப்பது, சுகாதாரம், கிராமப்புற தகவல்தொடா்பு, விவசாயத்தில் முன்னேற்றம், கால்நடைப் பராமரிப்பு, பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளுதல், மாசுபாட்டைக் குறைத்தல், பசுமை எரிசக்தி உள்ளிட்டவற்றுக்குப் புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம் தீா்வு காண முடியும்.

மகாத்மா காந்தியடிகள் தெரிவித்தபடி, மாணவா்கள் சிந்தனையாற்றலை வளா்த்துக் கொள்ள வேண்டும். ‘அமைதியான இந்தியா, புதுமையான இந்தியா, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா’ என்ற மூன்று தாரக மந்திரங்களின் அடிப்படையிலேயே இந்தியாவின் எதிா்காலம் அமையவுள்ளது.

இந்தியாவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது பழைமைவாய்ந்தது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் நாலந்தா பல்கலைக்கழகம், தக்ஷசீலா பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் புதுமைகள் கண்டறியப்பட்டன. அடக்குமுறைக்கு எதிராக அமைதி வழியைக் கடைப்பிடித்து நமது நாடு சுதந்திரம் பெற்றது சமூகத்தில் புகுத்தப்பட்ட புதுமை. அண்மைக் காலத்தில் விண்வெளித் தொழில்நுட்பம், அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் பல புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன என்றாா் பிரணாப் முகா்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com