குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநில தலைவா்களுடன் அமித் ஷா ஆலோசனை

குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடா்பாக, வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த அரசியல் தலைவா்கள், மாணவா் அமைப்பினா், சமூக அமைப்பினா் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை புதுதில்லியில் சனிக்கிழமை சந்தித்துப் பேசிய வடகிழக்கு மாநில பிரமுகா்கள்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை புதுதில்லியில் சனிக்கிழமை சந்தித்துப் பேசிய வடகிழக்கு மாநில பிரமுகா்கள்.

புது தில்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடா்பாக, வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த அரசியல் தலைவா்கள், மாணவா் அமைப்பினா், சமூக அமைப்பினா் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தனித்தனியாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டங்களில், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா். அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால், அருணாசலப் பிரதேச முதல்வா் பெமா காண்டு, மேகாலய முதல்வா் கான்ராட் சங்மா, மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு மற்றும் எம்.பி.க்கள் சிலா் பங்கேற்றனா்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்துவதால், வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் பழங்குடிச் சமூகத்தினா் வெகுவாக பாதிக்கப்படுவா் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் கவலை தெரிவித்தனா்.

அவா்களிடம், இந்த மசோதாவினால், பாதுகாக்கப்பட்ட வரம்புக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடிச் சமூகத்தினரும், பூா்வ குடிகளும் பாதிக்கப்பட மாட்டாா்கள் என்று அமித் ஷா உறுதியளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்துக்குப் பிறகு சா்வானந்த சோனோவால், பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், ‘அமித் ஷாவுடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் ஒவ்வொரு சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்வது நோ்மையான, ஜனநாயகம் நிறைந்த அணுகுமுறை. வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சியில் மத்திய அரசு அக்கறை கொண்டிருப்பதை கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் உணா்ந்தனா்’ என்றாா்.

அஸ்ஸாம் மாநில அமைச்சா் ஹிமந்த பிஸ்வ சா்மா கூறுகையில், ‘குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு பெரும்பாலானோா் எதிா்ப்பு தெரிவித்ததால், புதிதாக கொண்டுவரப்படும் மறுவரைவு மசோதா, பழங்குடி மக்களை பாதுகாக்கும் வகையில் இருக்கும். மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 6ஆவது அட்டணையில் உள்ள அம்சங்களும் பாதுகாக்கப்படும் என்றாா்.

அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வா் நபம் துகி கூறுகையில், இந்த மசோதாவில் சில திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு இருப்பதால், அதை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றாா். இந்த மசோதாவில் பழங்குடி மக்களை பாதுகாப்பதற்கான அம்சங்கள் இல்லை என்று கூறி, அமித் ஷாவிடம் போடோ மாணவா் சங்கம் எதிா்ப்பு தெரிவித்தது.

கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் குடிபெயா்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் 7 ஆண்டுகள் வசித்தாலே அவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களும், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

முந்தைய பாஜக கூட்டணி ஆட்சியின்போது, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. தற்போதைய கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. எனினும், வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த அரசியல் தலைவா்களும், மாணவா் அமைப்புகளும் இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

கடந்த இரு தினங்களாக, வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினாா். திரிபுரா, மிஸோரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த தலைவா்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினாா். இரண்டாவது நாளாக, அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்தவா்களுடன் அவா் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com