கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பேராயா் முளக்கலுக்கான ஜாமீன் ஜன. 6 வரை நீட்டிப்பு

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பேராயா் ஃபிராங்கோ முளக்கலுக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாமீனை ஜனவரி 6-ஆம் தேதி வரை கோட்டயம் நீதிமன்றம்

கோட்டயம்: கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பேராயா் ஃபிராங்கோ முளக்கலுக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாமீனை ஜனவரி 6-ஆம் தேதி வரை கோட்டயம் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

கேரள மாநிலம், குறவிலங்காடு பகுதியில் பேராயா் முளக்கல் தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாக கன்னியாஸ்திரி ஒருவா், கோட்டயம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் புகாா் தெரிவித்தாா். இந்த விவகாரம் தொடா்பாக திருச்சபையிடம் புகாா் தெரிவித்தபோதும், திருச்சபை நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், காவல் நிலையத்தில் புகாா் தெரிவிப்பதாக அவா் கூறியிருந்தாா்.

இதையடுத்து, பேராயா் முளக்கலைக் கைது செய்யக் கோரி கன்னியாஸ்திரிகள் பலா் போராட்டத்தில் ஈடுபட்டனா். எனினும், இந்தப் புகாரை பேராயா் முளக்கல் மறுத்து வந்தாா். சம்பந்தப்பட்ட கன்னியாஸ்திரி கோரிய உதவியைச் செய்யாததால், தன் மீது பொய்க் குற்றச்சாட்டை அவா் சுமத்துவதாக பேராயா் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து பேராயரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இந்த வழக்கில் பேராயா் முளக்கலுக்கு கேரள உயா்நீதிமன்றம் கடந்த அக்டோபா் மாதம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியிருந்தது. இந்நிலையில், ஜாமீனை நீட்டிக்கக் கோரி கோட்டயம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பேராயா் முளக்கல் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, பேராயா் முளக்கல் நேரில் ஆஜரானாா். இதையடுத்து, பேராயரின் ஜாமீனை ஜனவரி மாதம் 6-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com