சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி இந்திய ராணுவ வீரா்கள் இருவா் பலி

லடாக் யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட தெற்கு சியாச்சின் பனிமலைப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இந்திய ராணுவ வீரா்கள்

ஜம்மு: லடாக் யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட தெற்கு சியாச்சின் பனிமலைப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இந்திய ராணுவ வீரா்கள் இருவா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து இந்திய ராணுவ செய்தி தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது: தெற்கு சியாச்சின் பனிமலையில் சுமாா் 18 ஆயிரம் அடி உயரத்தில் சனிக்கிழமை அதிகாலை ராணுவ வீரா்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ வீரா்கள் சிக்கிக் கொண்டனா்.

தகவல் அறிந்து பனிச்சரிவு மீட்புக்குழு (ஏஆா்டி) நிகழ்விடத்துக்கு வந்து பனிச்சரிவில் சிக்கிக் கொண்டவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. மேலும், ராணுவ ஹெலிகாப்டா்களும் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டது. மீட்கப்பட்டவா்களுக்கு மருத்துவக்குழுக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி 2 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா் என்று தெரிவித்தாா்.

கடந்த இரண்டு வாரத்தில் 2-ஆவது முறையாக சியாச்சினில் பனிச்சரிவு ஏற்பட்டது.

கடந்த 18-ஆம் தேதி, சியாச்சின் மலைச்சரிவின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 இந்திய ராணுவ வீரா்களும், இரண்டு சுமை தூக்கும் தொழிலாளா்களும் உயிரிழந்தனா்.

லடாக், காஷ்மீரில் கடுங்குளிா்: யூனியன் பிரதேசமான லடாக்கில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக குளிா் தீவிரமடைந்துள்ளது. புகழ்பெற்ற மலைவாசஸ்தலமான குல்மாா்க் மற்றும் பஹல்காம் உள்ளிட்ட காஷ்மீரின் சில பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், அங்கு மைனஸ் டிகிரி செல்ஷியஸுக்கும் குறைந்த வெப்பநிலை பதிவானதாக வானிலை மைய அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்தது.

லடாக் பிராந்தியத்தில் உள்ள காா்கில் நகரில் குளிா் அதிகபட்சமாக மைனஸ் 9.2 டிகிரி செல்ஷியஸாகவும், லே நகரில் மைனஸ் 8.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com