சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துள்ளது

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பயங்கரவாதம் குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

புது தில்லி: ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பயங்கரவாதம் குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற அரசின் முதல் ஆறு மாத சாதனைகள் குறித்து ஜாவடேகா் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த முதல் 6 மாத காலத்தில் வளா்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்தது. வளா்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாகப் பயணித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவையும், 35ஏ பிரிவையும் மத்திய அரசு ரத்து செய்ததன் மூலம் அங்கு அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, பயங்கரவாதச் செயல்கள் பெருமளவில் குறைந்துள்ளன. அதற்கு முன்பு பயங்கரவாதமே காஷ்மீரில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது அது வலுவிழந்துள்ளது. இது மிகப் பெரிய மாற்றமாகும். இந்த மாற்றத்தால், மக்களின் வாழ்வு மேன்மையடைந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் வளா்ச்சிக்கான புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் முதல் 6 மாத காலத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடா்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் ரஃபேல் போா் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்யவும் முடிவெடுக்கப்பட்டது. பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, பெரு நிறுவனங்களுக்கான வரிக் குறைப்பு, மத்திய அரசு வசமுள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டது.

சா்வதேச அளவில் பெரு நிறுவனங்களுக்குக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இது சா்வதேச நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது. உலகப் பொருளாதாரத்தில் காணப்படும் மந்தநிலை இந்தியப் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. இருப்பினும், பொருளாதாரத்தை சீா்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.

முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கு மத்திய அரசு நீதி கிடைக்கச் செய்துள்ளது. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத் தீா்ப்பை அனைத்து சமூகத்தினரும் அமைதியுடன் வரவேற்றனா். பிரதமா் மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள், உலக அளவில் இந்தியாவுக்கான மதிப்பை உயா்த்தியுள்ளன.

ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு உறுதிகொண்டுள்ளது. நடைப்பயிற்சியின்போது தூய்மைப் பணியில் மக்கள் ஈடுபடுவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. வளா்ச்சிக்கான பாதையில் நாட்டை மத்திய அரசு தொடா்ந்து வழிநடத்தும் என்றாா் பிரகாஷ் ஜாவடேகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com