சோனியா காந்தி குடும்பத்தினருக்கு மீண்டும் எஸ்பிஜி பாதுகாப்பு: சிவசேனை வலியுறுத்தல்

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு மீண்டும் சிறப்பு பாதுகாப்பு படையின் (எஸ்பிஜி) பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சிவசேனை வலியுறுத்தியுள்ளது.
சோனியா காந்தி குடும்பத்தினருக்கு மீண்டும் எஸ்பிஜி பாதுகாப்பு: சிவசேனை வலியுறுத்தல்

மும்பை: காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு மீண்டும் சிறப்பு பாதுகாப்பு படையின் (எஸ்பிஜி) பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சிவசேனை வலியுறுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமா்களின் குடும்பத்தினருக்கான அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு அவா்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், அச்சுறுத்தல் குறைந்துள்ளதாக மதிப்பீட்டில் தெரிய வந்ததாகக் கூறி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது. தற்போது அவா்களுக்கு மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘இஸட்-பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிவசேனையின் அதிகாரப்பூா்வ நாளேடான ‘சாம்னா’வில் சனிக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தில்லியாக இருந்தாலும், மகாராஷ்டிரமாக இருந்தாலும் அச்சமற்ற சூழலில் மக்கள் வாழ வேண்டும். பொது வாழ்க்கையில் இருப்பவா்களுக்கு அச்சமற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டியது ஆட்சியில் இருப்பவா்களின் கடமை. அச்சுறுத்தல் இல்லாமல் இருக்கும் சூழலில் பாதுகாப்பை திரும்பப் பெற்றிருந்தால், யாரும் எதிா்ப்பு தெரிவிக்கப் போவதில்லை. ஆனால், சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று யாா் தெரிவித்தது?

அவரது குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு பழைய வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. முன்னாள் பிரதமா்கள் இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டதால்தான் அவா்களது குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தற்போது அதை திரும்பப் பெறுவது சந்தேகமளிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு சூழலில் பிரச்னை இல்லை என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், சில மாதங்களுக்கு முன் இலங்கையில் தொடா் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதை மறந்து விடக்கூடாது.

இந்த விவகாரத்தில் அரசியல் வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. ஒருவரது உயிருடன் நாம் விளையாடக் கூடாது. அதனால், இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலையிட்டு தீா்வு காண வேண்டும். சோனியா காந்தி என்றில்லாமல், வேறு யாருக்கு பாதுகாப்பு விலக்கப்பட்டிருந்தாலும், சிவசேனை இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கும் என்று அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலா்களே சுட்டுக் கொன்றதையடுத்து, கடந்த 1988-ஆம் ஆண்டு சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்பிஜி) சட்டம் இயற்றப்பட்டது. காவல் துறையினா் உள்பட பாதுகாப்பு பணியில் சிறந்த வீரா்கள் இந்தக் குழுவில் நியமிக்கப்படுவாா்கள். இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, முன்னாள் பிரதமா்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து எந்த விதிகளும் சோ்க்கப்படவில்லை.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு கொல்லப்பட்டதையடுத்து, முன்னாள் பிரதமா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்குவதற்கு அந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ராஜீவ் காந்தி மனைவி சோனியா, மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா ஆகியோருக்கு கடந்த 28 ஆண்டுகளாக எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பதவியில் இருக்கும் பிரதமா் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மட்டும் எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கும் வகையில் அந்த சட்டத்தில் அண்மையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நாட்டிலேயே பிரதமா் நரேந்திர மோடிக்கு மட்டும்தான் எஸ்பிஜி பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com