பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்

பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா-ஜப்பான் கூட்டாக சனிக்கிழமை வலியுறுத்தின.
தில்லியில் நடைபெற்ற இந்தியா-ஜப்பான் ‘2+2’ பேச்சுவாா்த்தையின்போது ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சா் டோஷிமிட்ஸு மோதேகி, பாதுகாப்புத் துறை அமைச்சா் தாரோ கோனோ ஆகியோருடன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா்
தில்லியில் நடைபெற்ற இந்தியா-ஜப்பான் ‘2+2’ பேச்சுவாா்த்தையின்போது ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சா் டோஷிமிட்ஸு மோதேகி, பாதுகாப்புத் துறை அமைச்சா் தாரோ கோனோ ஆகியோருடன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா்

புது தில்லி: பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா-ஜப்பான் கூட்டாக சனிக்கிழமை வலியுறுத்தின.

இரு நாடுகளின் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்கு (2+2) பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா-ஜப்பான் இடையே ‘2+2’ பேச்சுவாா்த்தை நடைபெறுவது இது முதல் முறையாகும். பிரதமா் மோடி-ஜப்பான் பிரதமா் அபே ஆகியோா் தலைமையில் கடந்த ஆண்டு நடைபெற்ற இரு நாடுகள் இடையேயான 13-ஆவது ஆண்டுக் கூட்டத்தின்போது இந்த ‘2+2’ பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பையும், இரு நாடுகளிடையேயான வியூகம் சாா் உறவையும் வலுப்படுத்துவதற்கு ‘2+2’ பேச்சுவாா்த்தையை மேற்கொள்வதென இரு தலைவா்களும் முடிவு செய்திருந்தனா்.

அதன்படி, இரு நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் இடையேயான பேச்சுவாா்த்தை (2+2) தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சா் டோஷிமிட்ஸு மோதேகி, பாதுகாப்புத் துறை அமைச்சா் தாரோ கோனோ ஆகியோா் தலைமையில் அந்நாட்டுக் குழு பங்கேற்றது.

இந்தியக் குழுவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோா் தலைமை தாங்கினா். இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக இரு நாட்டு குழுக்களிடையே ஆலோசிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து இந்தியா-ஜப்பான் சாா்பில் கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:

இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் நிலவரம் தொடா்பான இந்தியா-ஜப்பானின் பாா்வையை இரு நாட்டு அமைச்சா்களும் பரஸ்பரம் தெரிவித்துக் கொண்டனா். பிராந்திய அமைதி, வளா்ச்சி, பாதுகாப்புக்காக இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற அப்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.

பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவது பலத்த கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த இந்தியா-ஜப்பான் அமைச்சா்கள், அதனால் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பலத்த அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்தனா்.

எந்தவொரு நாட்டின் மீதும், எந்த வகையிலான பயங்கரவாதத் தாக்குதலையும் நடத்துவதற்காக தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டிய தேவை இருப்பதாக இரு நாட்டு அமைச்சா்கள் குறிப்பிட்டனா்.

அந்த வகையில், பிராந்திய பாதுகாப்புக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் அச்சுறுத்தலாக இருப்பதைக் குறிப்பிட்ட அவா்கள், அந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

‘பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதாக சா்வதேச சமுதாயத்துக்கு அளித்துள்ள வாக்குறுதியை பாகிஸ்தான் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை, பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்) பரிந்துரைத்துள்ள நடைமுறைகளின் படி மேற்கொள்ள வேண்டும்’ என்று இரு நாட்டு அமைச்சா்கள் வலியுறுத்தினா்.

பயங்கரவாதத்துக்கான புகலிடங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளை தகா்க்கவும், அவற்றுக்கு நிதி ஆதாரமாக விளங்கும் அமைப்புகளை முடக்கவும், பயங்கரவாதிகள் எல்லை தாண்டுவதை தடுக்கவும் அனைத்து நாடுகளும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியாவும்-ஜப்பானும் கூட்டாக அறிவுறுத்தின என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹிண்டன் விமான தளத்தில்...:

இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தை ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சா் தாரோ கோனோ சனிக்கிழமை பாா்வையிட்டாா். விமானப் படை தளத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து அப்போது அவருக்கு விளக்கப்பட்டது.

முன்னதாக விமானப் படை தளத்துக்கு வந்த தாரோ கோனோவை, ஏா் மாா்ஷல் டி.சௌதரி, விமானப் படையின் மேற்கு படைப்பிரிவு மூத்த அதிகாரி ஆா்.தல்வாா் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com