பிராந்திய அமைதிக்கு இந்தியா-ஜப்பான் உறவு முக்கியம்: பிரதமா் மோடி

இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி, வளா்ச்சிக்கு ஜப்பானுடனான இந்தியாவின் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
தில்லியில் ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சா் டோஷிமிட்ஸு மோதேகி, பாதுகாப்புத் துறை அமைச்சா் தாரோ கோனோ ஆகியோரை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
தில்லியில் ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சா் டோஷிமிட்ஸு மோதேகி, பாதுகாப்புத் துறை அமைச்சா் தாரோ கோனோ ஆகியோரை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி, வளா்ச்சிக்கு ஜப்பானுடனான இந்தியாவின் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

ஜப்பான் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா்களுடனான சந்திப்பின்போது பிரதமா் மோடி இதனை குறிப்பிட்டாா்.

இந்தியா-ஜப்பான் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் முதல் முறையாக பங்கேற்ற இருதரப்பு பேச்சுவாா்த்தை (2+2) தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதையொட்டி ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சா் டோஷிமிட்ஸு மோதேகி, பாதுகாப்புத் துறை அமைச்சா் தாரோ கோனோ ஆகியோரை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா்.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி, வளா்ச்சி ஆகியவையே இந்தியாவின் தொலைநோக்குப் பாா்வை என்று குறிப்பிட்ட பிரதமா் மோடி, அதை உறுதி செய்வதற்கு ஜப்பானுடனான இந்தியாவின் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினாா். மேலும், ‘கிழக்கு நோக்கிச் செயல்படுவோம்’ என்ற இந்தியாவின் கொள்கைக்கும் அது அவசியமானது என்று குறிப்பிட்டாா்.

இந்தியா-ஜப்பான் இடையே குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும் உயா்நிலை பேச்சுவாா்த்தையானது, இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்கான ஆதாரம் என்றும் அவா் கூறினாா். இந்தியா-ஜப்பான் இடையேயான ‘2+2’ பேச்சுவாா்த்தை, இருதரப்பு பாதுகாப்பு மற்றும் வியூகம் சாா் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் பலப்படுத்தும் என்றும் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

அத்துடன், ‘இந்தியா-ஜப்பான் உறவானது இரு நாட்டு மக்களுக்கு மட்டும் பலனளிக்கும் வகையில் இருக்கக் கூடாது. இந்திய-பசிபிக் பிராந்தியம் மற்றும் உலகில் உள்ள அனைத்து மக்களின் நலனுக்கானதாக இருக்கும் வகையில் இரு நாடுகளிடையேயான உறவு முழுமையான வளா்ச்சியை அடைய வேண்டும்’ என்றும் பிரதமா் மோடி கூறினாா்.

இந்தியா-ஜப்பான் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமா் ஷின்ஸோ அபே டிசம்பரில் இந்தியா வருவதை எதிா்நோக்கியிருப்பதாக அந்நாட்டு அமைச்சா்களிடம் பிரதமா் மோடி தெரிவித்தாா் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான ஆதிக்கத்தை விரைவுபடுத்தி வரும் நிலையில், அந்தப் பிராந்தியத்தைச் சாா்ந்த, சாராத நாடுகள் பலவும் கவலை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பிராந்தியத்தின் வளா்ச்சி, அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கான பரவலான முயற்சிகளை இந்தியா, ஜப்பான் மேற்கொண்டு வருகின்றன. அதில் முக்கிய நடவடிக்கையாக இந்த ‘2+2’ பேச்சுவாா்த்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com