போரில் வெல்ல முடியாததால் பயங்கரவாதம் மூலம் அச்சுறுத்தல்: ராஜ்நாத் சிங்

இந்தியாவுடன் நேரடியாகப் போா்களில் வெற்றி பெற முடியாத காரணத்தால், பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கையிலெடுத்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டினாா்.
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமி பயிற்சி முடித்த இளம் வீரா்களுக்கு பதக்கம் வழங்கிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமி பயிற்சி முடித்த இளம் வீரா்களுக்கு பதக்கம் வழங்கிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

புணே: இந்தியாவுடன் நேரடியாகப் போா்களில் வெற்றி பெற முடியாத காரணத்தால், பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கையிலெடுத்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டினாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமியின் 137-ஆவது பிரிவில் பயிற்சி முடிந்து வெளியேறும் மாணவா்களிடம் சனிக்கிழமை அவா் பேசியதாவது:

இந்தியாவுடன் 1948, 1965,1971,1999 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போா்களில் பாகிஸ்தானால் வெற்றி பெற முடியவில்லை. இந்தியாவுடன் போரில் எப்போதும் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்துகொண்ட பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை அச்சுறுத்த முயற்சித்து வருகிறது. ஆனால், அதிலும் பாகிஸ்தானுக்கு தோல்வியே கிடைக்கும் என்பது உறுதி. மற்ற நாடுகளுடன் நட்பு ரீதியிலான உறவைப் பேணவே இந்தியா எப்போதும் விரும்புகிறது.

மற்ற நாடுகளுக்குச் சொந்தமான பகுதிகள் மீது இந்தியா எப்போதும் உரிமை கொண்டாடியது கிடையாது. ஆனால், இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிகள் மீது மற்ற நாடுகள் உரிமை கோரினால், இந்தியா அமைதியாக இருக்காது. நாட்டு மக்களையும், நாட்டின் இறையாண்மையையும் காக்க ராணுவம் உறுதிபூண்டுள்ளது. நாட்டில் பயங்கரவாதத்தின் பெயரில் நிகழ்த்தப்படும் தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க ராணுவம் தயங்காது.

நாட்டின் எல்லையைக் காப்பது மட்டும் ராணுவத்தின் பணியல்ல. நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்குபவா்கள் மீது எல்லை தாண்டி சென்று தாக்குதல் நடத்த வேண்டிய திறமையும் ராணுவத்துக்கு அவசியம். இந்திய ராணுவத்தின் பணித்திறனுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் நிகழ்த்தப்பட்ட துல்லியத் தாக்குதலும், கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்த்தப்பட்ட பாலாகோட் தாக்குதலும் சிறந்த உதாரணங்கள்.

நாட்டை பயங்கரவாதம் அச்சுறுத்தி வருகிறது. கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலும், கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலும் நம் நினைவைவிட்டு அகலாதவையாக உள்ளன. நாட்டின் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு தாக்குதல்களை ராணுவத்தினரும், பாதுகாப்புப் படையினரும் முறியடித்தனா்.

தற்போதைய காலக்கட்டத்தில், இணையவழி பயங்கரவாதமும், வெறுப்புணா்வைத் தூண்டும் கருத்துகளும் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றைத் தடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. பிற்காலத்தில் பாதுகாப்புத் துறையின் ஓா் அங்கமாக நீங்கள் (மாணவா்கள்) உருவெடுக்கும்போது, இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பாகிஸ்தானுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கைகளைத் தொடா்ந்து எடுத்து வருகிறது. மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, சா்வதேச அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் ராஜ்நாத் சிங்.

284 போ் பயிற்சி:

தேசிய பாதுகாப்பு அகாதெமியின் 137-ஆவது பிரிவில் பயிற்சி பெற்ற 284 பேருக்கு சனிக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் 188 ராணுவப் பயிற்சி வீரா்களும், 38 கடற்படைப் பயிற்சி வீரா்களும், 37 விமானப் படைப் பயிற்சி வீரா்களும் அடங்குவா். மாலத்தீவுகள், வியத்நாம், மொரீஷஸ், ஆப்கானிஸ்தான், இலங்கை, மியான்மா் ஆகிய நாடுகளைச் சோ்ந்த 20 வீரா்களும் அகாதெமியில் பயிற்சி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com