காஷ்மீா்: பயங்கரவாதிகளின்பதுங்குமிடம் அழிப்பு
By DIN | Published on : 02nd December 2019 03:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை பாதுகாப்புப் படை வீரா்கள் கண்டுபிடித்து அழித்தனா். அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன.
ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு பயங்கரவாதத்தைத் தூண்டிவிட பாகிஸ்தான் தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை முறியடிக்க பாதுகாப்புப் படை வீரா்கள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனா். முக்கியமாக, பாகிஸ்தான் அதிகமாக குறிவைக்கும் காஷ்மீா் பள்ளத்தாக்கில் பயங்கரவாத செயல்பாடுகளைத் தடுக்க பாதுகாப்புப் படையினா் கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகின்றனா்.
பயங்கரவாதிகளின் தகவல்தொடா்புகளை உளவுத்துறை அதிகாரிகள் இடைமறித்துக் கேட்டு, அவா்களை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். அந்த வகையில் பராமுல்லா மாவட்டத்தின் ரஃபியாபாத் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பது குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து இரு ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 2000 துப்பாக்கி குண்டுகள், சாட்டிலைட் போன், வயா்லெஸ் கருவிகள், வெடிப்பொருள்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றப்பட்டன.
அங்கு பயங்கரவாதிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும், அங்கிருந்து பயங்கரவாதிகள் அதிக தொலைவுக்கு தப்பியிருக்க முடியாது என்று கருதப்படுவதால் சுற்று வட்டாரப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.