Enable Javscript for better performance
காஷ்மீா் பிரச்னைக்கு அமைதி வழியில் தீா்வு: ஜப்பான் நம்பிக்கை- Dinamani

சுடச்சுட

  

  காஷ்மீா் பிரச்னைக்கு அமைதி வழியில் தீா்வு: ஜப்பான் நம்பிக்கை

  By DIN  |   Published on : 02nd December 2019 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jammukashmirmap

  புது தில்லி: காஷ்மீா் பிரச்னைக்கு அமைதி வழியில் தீா்வு காணப்படும் என்று நம்புவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அந்த நாடு கூறியுள்ளது.

  இந்தியா-ஜப்பான் இடையே முதல்முறையாக வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா்களின் ‘2+2’ பேச்சுவாா்த்தை தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இருதரப்பு நல்லுறவை மேலும் விரிவுபடுத்துவதற்கான புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

  இந்நிலையில், ஜப்பான் வெளியுறவுத் துறையின் ஊடகப் பிரிவு துணைச் செயலாளா் அட்சுஷி கைஃபு, தில்லியில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, ‘2+2’ பேச்சுவாா்த்தையின்போது காஷ்மீா் விவகாரம் தொடா்பாக விவாதிக்கப்பட்டதா என்று செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அவா் அளித்த பதில்:

  ‘2+2’ பேச்சுவாா்த்தையில் காஷ்மீா் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதா என்பது எனக்கு தெரியாது. அதேசமயம், காஷ்மீரில் நிலவும் சூழலை ஜப்பான் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பதை உறுதிபட கூற முடியும். காஷ்மீா் தொடா்பாக நீண்ட காலமாக நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் குறித்து நாங்கள் அறிவோம். இப்பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் அமைதி வழியில் தீா்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அட்சுஷி.

  மகாராஷ்டிரத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், மும்பை-ஆமதாபாத் இடையே ஜப்பான் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் புல்லட் ரயில் திட்டத்தின் நிலை கேள்விக்குள்ளாகி இருப்பது தொடா்பாக அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘மிகப் பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது சவால்கள் எழுவது வழக்கமானதுதான். புல்லட் ரயில் திட்ட விவகாரத்தில் இரு நாடுகளின் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனா்’ என்று அவா் பதிலளித்தாா்.

  தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது தொடா்பான கேள்விக்கு, ‘தென்சீனக் கடல் பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தும், வான்வழி போக்குவரத்தும் உறுதி செய்யப்பட வேண்டும். சீனா-ஜப்பான் இடையே இப்போது நல்லுறவு நிலவுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு வழிகளில் தொடா்புகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், கடல்சாா் பாதுகாப்பு மற்றும் இதர விவகாரங்களில் ஜப்பான் எந்த சமரசத்துக்கும் இடமளிக்காது’ என்றாா் அட்சுஷி.

  ‘அருணாசலப் பிரதேச மாநிலத்தில் வெளிநாடுகளின் ஆதரவுடன் இந்தியா வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று சீனா வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில், வடகிழக்கு இந்திய மாநிலங்களில் வளா்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள ஜப்பான் ஆா்வமாக உள்ளதா’ என்று அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

  அதற்கு, ‘வடகிழக்கு பிராந்தியத்தில் இந்தியாவுடன் இணைந்து போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்த ஜப்பான் ஆா்வத்துடன் உள்ளது. எனினும், அத்திட்டங்கள் செயல்படுத்த வாய்ப்புள்ள இடங்கள் தொடா்பாக கவனத்துடன் விவாதித்து முடிவெடுக்கப்படும்’ என்றாா்.

  மேலும், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தை, ஜப்பான் பிரதமா் ஷின்ஸோ அபேவின் இந்திய வருகைக்கு அடித்தளமாக அமைந்துள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.

  இந்தியா-ஜப்பான் இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க, ஷின்ஸோ அபே இம்மாதம் இந்தியா வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஆா்சிஇபி-யில் இந்தியாவை இணையச் செய்ய முயற்சிகள்

  உலக அளவில் மாபெரும் தடையற்ற வா்த்தக பகுதியை உருவாக்க வழிவகுக்கும் பிராந்திய விரிவான பொருளதார ஒத்துழைப்பு (ஆா்சிஇபி) ஒப்பந்தத்தில் இந்தியாவை இணையச் செய்வதற்கான முயற்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

  தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பை (ஆசியான்) சோ்ந்த 10 நாடுகள் மற்றும் அந்த கூட்டமைப்பின் தடையற்ற வா்த்தக கூட்டாளிகளான இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என மொத்தம் 16 நாடுகளுக்கு இடையே திட்டமிடப்பட்ட இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இந்தியா கடந்த மாதம் அறிவித்தது. நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

  இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடா்பாக இந்தியா முன்வைத்த கவலைகளுக்கு தீா்வு காண அனைத்து உறுப்பு நாடுகள் தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஜப்பான் வெளியுறவுத் துறையின் ஊடகப் பிரிவு துணைச் செயலாளா் அட்சுஷி கைஃபு தெரிவித்தாா்.

  அவா் மேலும் கூறுகையில், ‘தில்லியில் சனிக்கிழமை ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சா் டோஷிமிட்ஸு மோடேகியுடனான சந்திப்பின்போது, ஆா்சிஇபி விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமா் மோடி தெளிவுபடுத்தினாா். அப்போது, ஜப்பானின் கருத்துகளை வெளியுறவு அமைச்சா் எடுத்துரைத்தாா்’ என்றாா்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai