2024-க்குள் இந்தியாவில் ஊடுருவியுள்ள அனைவரும் வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷா

என்ஆர்சியை அமல்படுத்துவதன் மூலம் இந்தியாவில் ஊடுருவியிருக்கும் அனைவரும் 2024-ஆம் ஆண்டுக்குள் வெளியேற்றப்படுவார்கள் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


என்ஆர்சியை அமல்படுத்துவதன் மூலம் இந்தியாவில் ஊடுருவியிருக்கும் அனைவரும் 2024-ஆம் ஆண்டுக்குள் வெளியேற்றப்படுவார்கள் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் சைபாசா நகரில் பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று (திங்கள்கிழமை) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 

"தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) அமல்படுத்துவதன் மூலம், இந்தியாவில் ஊடுருவியிருக்கும் அனைவரும் 2024-ஆம் ஆண்டுக்குள் வெளியேற்றப்படுவார்கள். இது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு. நாங்கள் என்ஆர்சியை அமல்படுத்துவோம்.

ஜார்க்கண்ட் மக்களுக்கு தேசியப் பிரச்னைகளும் முக்கியமானதுதான். ஜார்க்கண்டைச் சேர்ந்த பல்வேறு ராணுவ வீரர்கள் தேசத்தின் பாதுகாப்புக்காக எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில், பாகிஸ்தானில் இருந்து யார் வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் நுழைந்து குண்டுவெடிப்புச் சம்பவத்தை நிகழ்த்தலாம். ராணுவ வீரர்களின் தலை துண்டிக்கப்படலாம்.

பாஜக தலைமையிலான அரசின் கீழ் உரி மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தானுக்குச் சென்று அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 

ராகுல் காந்தி இன்றைக்கு ஜார்க்கண்டில்தான் உள்ளார். ஜார்க்கண்டில் பாஜகவின் 5 ஆண்டுகால ஆட்சியை காங்கிரஸ் கட்சியின் 55 ஆண்டுகால ஆட்சியுடன் ஒப்பிடுமாறு நான் அவருக்கு சவால் விடுகிறேன். ஜார்க்கண்ட் மாநிலம் வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறியுள்ளது. பழங்குடியின மக்கள் உட்பட மாநில மக்களின் நலனுக்காக பாஜக எண்ணற்றப் பணிகளைச் செய்துள்ளது. பழங்குடியின மக்களின் மதமாற்றத்தைத் தடுக்க ஜார்க்கண்ட் அரசு சட்டம் இயற்றியுள்ளது.
 
ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி - ஜேஎம்எம்) அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். ஜேஎம்எம் தலைவர் (ஷிபு சோரேன்) தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தியபோது காங்கிரஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 

எங்களுக்கு மாநிலம் வளர்ச்சியடைய வேண்டும். பாஜக ஊழலற்ற அரசை வழங்கியுள்ளது.

ஜார்க்கண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு குழு ஒன்றை அமைக்க பாஜக முடிவு செய்துள்ளது. பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டைப் பாதிக்காத வகையில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு உயர்த்தப்படும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com