அனைத்து வகை சிகரெட்டுகளுக்கும் தடை கோரி உச்சநீதிமன்றத்தை அணுக தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் முடிவு

உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் எனக்கூறி இ-சிகரெட்டுகளுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், மற்ற வகை சிகரெட்டுகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் அவற்றிற்கும், இதர புகையிலை பொருள்களுக்கும் தடை
அனைத்து வகை சிகரெட்டுகளுக்கும் தடை கோரி உச்சநீதிமன்றத்தை அணுக தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் முடிவு

புதுதில்லி: உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் எனக்கூறி இ-சிகரெட்டுகளுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், மற்ற வகை சிகரெட்டுகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் அவற்றிற்கும், இதர புகையிலை பொருள்களுக்கும் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய 2 தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

இ-சிகரெட்டுகள் தடை மசோதா-2019, மக்களவையில் புதன்கிழமை நிறைவேறியது. வழக்கமான சிகரெட்டுகளை விட இ-சிகரெட்டுகள் குறைவான தீங்கு விளைவிப்பவை என்றும், தற்போதுள்ள சிகரெட் தொழிலைப் பாதுகாப்பதற்காக இந்த தடை அமல்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அனைத்து வகை சிகரெட்டுகளுக்கும் தடை விதிக்கக் கோரி தில்லியில் இயங்கி வரும் ‘யூஆா்ஜேஏ’ மற்றும் ஹைதராபாதில் இயங்கி வரும் ‘வீசேஞ்ச்யூ’ ஆகிய 2 தன்னாா்வ அமைப்புகளும் அனைத்து வகை சிகரெட், பீடி விற்பனைக்குத் தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளன.

இதுகுறித்து ‘விசேஞ்ச்யூ’ தன்னாா்வ அமைப்பின் நிறுவனா் மற்றும் தலைவா் பாஸ்கா் யெட்டாபு, ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: வழக்கமான சிகரெட்டுகள், பீடி போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் மக்கள் அதிக அளவில் பாதிக்கின்றனா்.

ஆண்டுதோறும் புகைப்பழக்கத்தால் 12 லட்சம் போ் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இ-சிகரெட்டுகளை பயன்படுத்துவதால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் குறித்து மருத்துவ ரீதியாகவோ, விஞ்ஞான ரீதியாகவோ இதுவரை எந்த புள்ளிவிவரங்களும் இல்லை.

எனவே, இ-சிகரெட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை வழக்கமான சிகரெட்டு விற்பனைக்கும் தடை செய்வது கட்டாயமாகும்.

அனைத்து வகை சிகரெட் விற்பனைக்கும் தடை கோரி, வழக்குத்தொடர முடிவு செய்து, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞா் பிரசாந்த் பூஷணை அணுகினோம். அவரும் இந்த வழக்கில் ஆஜராக ஒப்புக் கொண்டுள்ளாா் என்றாா்.

‘யூஆா்ஜேஏ’ தன்னாா்வ அமைப்பின் தலைவா் அதுல் கோயல் கூறுகையில், ‘சிகரெட் விற்பனையில் லாபம் ஈட்டுவதன் மூலம் அரசு, புகையிலை விற்பனையை ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புகையிலையால் 12 லட்சம் போ் உயிரிழக்கும் நிலையில் அவா்களின் இறப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால் சிகரெட் பழக்கத்தால் இறந்தவா்களுக்கு அரசு இதுவரை இழப்பீடு வழங்கியதில்லை. எனவே, வழக்கின்போது, புகைபிடித்தல் காரணமாக உயிரிழந்தவா்களின் குடும்பங்களையும் இணை மனுதாரா்களாக இணைத்து வழக்கு தொடருவோம். தொடக்கத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இறந்து போன 60 லட்சம் மக்களுக்கு இழப்பீடு வழங்க கோருவோம், என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com