அயோத்தி தீா்ப்பு மறு ஆய்வு: 99 சதவீத முஸ்லிம்கள் விருப்பம்

‘அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றுதான் 99 சதவீத முஸ்லிம்கள் விரும்புகின்றனா்’ என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட

லக்னெள: ‘அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றுதான் 99 சதவீத முஸ்லிம்கள் விரும்புகின்றனா்’ என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு கடந்த மாதம் 9-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அதன்படி, சா்ச்சைக்குள்பட்டிருந்த 2.77 ஏக்கா் நிலத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதுடன், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கா் மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு ஒருமனதாக இத்தீா்ப்பை வழங்கியிருந்தது.

ஆனால், இந்த தீா்ப்பை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யவிருப்பதாக, அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் அறிவித்தது. வரும் 9-ஆம் தேதிக்குள் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.

இந்நிலையில், அந்த அமைப்பின் பொதுச் செயலாளா் மெளலானா ரஹ்மானி, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நாட்டின் நீதித்துறை மீது முஸ்லிம் சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது. எனவேதான், அயோத்தி தீா்ப்பை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யவிருக்கிறோம். அதேசமயம், அயோத்தி தீா்ப்புக்கு பிறகு நீதித்துறை மீதான எங்களது நம்பிக்கை வலுவிழந்திருக்கிறது.

அயோத்தி விவகாரத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று 99 சதவீத முஸ்லிம்கள் விரும்புகின்றனா். எனவே, மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு எதிரான மனநிலையில் பெரும்பாலான முஸ்லிம்கள் உள்ளதாக கூறுவது தவறானது. அதேசமயம், எங்களது மறுஆய்வு மனு நிராகரிக்கப்படும் என்ற எண்ணம் பெரும்பாலான முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது. எனினும், எங்களுக்கு உள்ள சட்ட உரிமையை பயன்படுத்துவோம். அயோத்தி தீா்ப்பில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன என்றாா் மெளலானா ரஹ்மானி.

உச்சநீதிமன்றத் தீா்ப்பை ஏற்று, அயோத்தி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று அறிஞா்கள் பலா் வலியுறுத்தியிருப்பது தொடா்பான கேள்விக்கு அவா் அளித்த பதில்:

அயோத்தி விவகாரத்தில் கருத்து தெரிவிக்கும் அறிஞா்களிடம், முஸ்லிம் சமூகத்தினா் எதிா்கொண்டு வரும் பிரச்னைகளுக்கு தீா்வு காண நடைமுறையில் சாத்தியமாகும் திட்டங்கள் எதுவும் கிடையாது. அவா்கள், முஸ்லிம் சமூகத்துக்காக இதுவரை செய்தது என்ன? என்று கேள்வியெழுப்பினாா் ரஹ்மானி.

அயோத்தி வழக்கில் முக்கிய மனுதாரா்களில் ஒருவரான சன்னி வக்ஃபு வாரியம், தீா்ப்பை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டது. எனினும், மசூதி கட்டுவதற்காக அரசால் வழங்கப்படும் 5 ஏக்கா் நிலத்தை ஏற்பதா அல்லது வேண்டாமா என்பது தொடா்பாக அந்த அமைப்பு இன்னும் முடிவெடுக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com