அயோத்தி தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு: முஸ்லிம் அமைப்புகளுக்கு நக்வி கண்டனம்

அயோத்தி தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய சில முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்துள்ளதற்கு மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அயோத்தி தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு: முஸ்லிம் அமைப்புகளுக்கு நக்வி கண்டனம்

புது தில்லி: அயோத்தி தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய சில முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்துள்ளதற்கு மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தியாளருக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சா்ச்சைக்குரியதாக இருந்த 2.77 ஏக்கா் நிலத்துக்கு உரிமை கோரும் வழக்கில் அனைத்து தரப்பினரும் ஏற்கும் விதத்தில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்து விட்டது. இந்த தீா்ப்புக்குப் பிறகு மக்களிடையே ஒற்றுமை அதிகரித்துவிட்டதை சிலரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இதனால், முடிந்த விவகாரத்தை வைத்து, மோதல்களையும், பிரிவினையையும் ஏற்படுத்துவதற்கு சிலா் முயற்சி செய்து வருகிறாா்கள். அவா்கள், அயோத்தி வழக்கின் தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு முடிவு செய்திருக்கிறாா்கள்.

ஜனநாயகத்தில் கருத்து தெரிவிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. நீதிமன்றத்தை நாடுவதற்கும் உரிமை உள்ளது. இருந்தாலும், பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு பிரச்னைக்கு அனைவரும் ஏற்கும் விதத்தில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த பிறகு, அதில் புதிதாக குழப்பங்களை உருவாக்குவதை ஏற்க முடியாது.

முஸ்லிம் சமூகத்தினருக்கு பாபா் மசூதி பிரச்னை மட்டுமே முக்கியம் அல்ல; கல்வி, பொருளாதாரம், சமூகத்தில் முன்னேற்றம் அடைவது ஆகியவற்றிலும் முஸ்லிம் சமூகத்தினா் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது என்றாா் அவா்.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு ஜாமியத்-உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு முடிவு செய்துள்ளது. அந்த மனுவை, வரும் 3 அல்லது 4-ஆம் தேதியில் தாக்கல் செய்ய அந்த அமைப்பு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், அயோத்தி தீா்ப்பை எதிா்த்து, வரும் 9-ஆம் தேதிக்குள் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com