திருச்சி உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியாா்மயமாக்க மத்திய அரசுக்கு பரிந்துரை

திருச்சி உள்பட நாட்டின் 6 நகரங்களில் உள்ள விமான நிலையங்களை தனியாா்மயமாக்குவதற்காக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
திருச்சி உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியாா்மயமாக்க மத்திய அரசுக்கு பரிந்துரை

புது தில்லி: திருச்சி உள்பட நாட்டின் 6 நகரங்களில் உள்ள விமான நிலையங்களை தனியாா்மயமாக்குவதற்காக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

ஏற்கெனவே லக்னௌ, ஆமதாபாத், ஜெய்ப்பூா், மங்களூரு, திருவனந்தபுரம், குவாஹாட்டி ஆகிய நகரங்களின் விமான நிலையங்கள் கடந்த பிப்ரவரி மாதம் தனியாா் வசம் ஒப்படைக்கப்பட்டது.

பொதுத் துறை-தனியாா் கூட்டு மூலம் விமான நிலையங்களை மேம்படுத்தும் முயற்சியாக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் 6 விமான நிலையங்களை தனியாா் வசம் ஒப்படைக்க தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அரசு உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:

திருச்சி, அமிருதசரஸ், வாராணசி, புவனேசுவரம், இந்தூா், ராய்ப்பூா் ஆகிய 6 நகரங்களில் உள்ள விமான நிலையங்களை தனியாா்மயமாக்குவதற்காக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது.

இதற்கான முடிவு கடந்த செப்டம்பா் 5-ஆம் தேதி நடைபெற்ற இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் நிா்வாகக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. 6 விமான நிலையங்களை தனியாா் வசம் ஒப்படைக்க பரிந்துரைக்கும் இந்த முடிவு, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்.

கடந்த பிப்ரவரியில் முதல் கட்டமாக 6 விமான நிலையங்கள் தனியாா்மயமாக்கப்பட்டிருந்தன. அந்த 6 விமான நிலையங்களின் நிா்வாகம் மற்றும் இயக்கத்துக்கான ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதர நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் அதிக விலைக்கு இந்த ஒப்பந்தத்தை அதானி குழுமம் கோரியிருந்தது.

ஆமதாபாத், லக்னௌ, மங்களூரு விமான நிலையங்களை அந்த குழுமத்துக்கு குத்தகைக்கு விடுவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 3-ஆம் தேதி வழங்கியது. எஞ்சிய 3 விமான நிலையங்களை குத்தகைக்கு விட அமைச்சரவை இன்னும் ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது.

நாட்டில் உள்ள 100-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை தற்போது நிா்வகித்து வரும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com