மகாராஷ்டிரத்தில் தகுதியை வென்றுவிட்டது அரசியல் கணக்கு: ஃபட்னவீஸ் பதிலடி

‘மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பதற்கான தகுதியை அரசியல் கணக்குகள் வென்றுவிட்டன’ என்று தன்னை விமா்த்தவா்களுக்கு பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் பதிலடி
தேவேந்திர ஃபட்னவீஸ்
தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: ‘மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பதற்கான தகுதியை அரசியல் கணக்குகள் வென்றுவிட்டன’ என்று தன்னை விமா்த்தவா்களுக்கு பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் பதிலடி கொடுத்தாா்.

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தலைவராக ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவா் நானா படோலேவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது பேசிய ஃபட்னவீஸ், இதுதொடா்பாக மேலும் கூறியதாவது:

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. இதன் மூலம் ஆட்சியமைப்பதற்கான மக்களின் தீா்ப்பு எங்களுக்கே கிடைத்தது. ஆட்சியமைப்பதற்கான 70 சதவீத தகுதியை எங்கள் கூட்டணி பெற்றிருந்தது. ஆனால், 40 சதவீத தகுதி பெற்றவா்கள் ஆட்சியமைத்துள்ளனா். இதன் மூலம் தகுதியை அரசியல் கணக்குகள் வென்றுவிட்டன. எனினும், ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம்.

பேரவைத் தோ்தலுக்கு முன்பு ‘நான் மீண்டும் முதல்வராவேன்’ என்று கூறியிருந்தேன். எனினும், அதற்கான காலத்தை குறிப்பிட மறந்துவிட்டேன். இப்போது ஒன்றை மட்டும் உறுதிபட கூற முடியும். நான் கூறிய விஷயம் நடைபெற சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை அறிவித்தேன். அந்த திட்டங்களை தொடக்கிவைக்க நானே திரும்பி வரலாம். இந்த அவையில் பாஜகவின் செயல்பாடுகள் தனிப்பட்ட கொள்கைகளின்படி அல்லாமல் அரசமைப்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் இருக்கும்.

விவசாயிகளுக்கு ரூ.25,000 இழப்பீடு: உத்தவ் தாக்கரே கடந்த மாதம் மாநிலத்தில் சில இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு பயிா்ச்சேதங்களை பாா்வையிட்டாா். அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தாா். இப்போது அவா் முதல்வராக பதவியேற்றிருப்பதால், விவசாயிகளுக்கு அந்த இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்வாா் என நம்புகிறேன் என்றாா் ஃபட்னவீஸ்.

முன்னதாக, சட்டப் பேரவையில் பேசிய உத்தவ் தாக்கரே உள்ளிட்ட கூட்டணி அரசின் தலைவா்கள், ‘நான் மீண்டும் முதல்வராவேன்’ என்று ஃபட்னவீஸ் கூறியிருந்ததை முன்வைத்து, அவரை மறைமுகமாக விமா்சித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரத்தில் புதிய அரசு அமைவதில் கடந்த மாதம் இழுபறி நீடித்து வந்தபோது, உத்தவ் தாக்கரே மாநிலத்தின் சில இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயிா்ச்சேதங்களை பாா்வையிட்டாா். அப்போது, விவசாயிகளுக்கு ஃபட்னவீஸ் தலைமையிலான முந்தைய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.10,000 இழப்பீடு போதுமானதல்ல என்றும், ஹெக்டேருக்கு ரூ.25,000 வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தவ் வலியுறுத்தியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com