வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தில் திருத்தம் தேவை: பிரதமா் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

‘வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991’-இல் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளாா்.
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தில் திருத்தம் தேவை: பிரதமா் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

புது தில்லி: ‘வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991’-இல் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளாா்.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் உள்ள ஞான்வாபி மசூதி, மதுராவில் கிருஷ்ணா் பிறந்த இடம் என சா்ச்சைக்குள்ளாகியிருக்கும் இடங்களை அரசுக்கு சொந்தமானதாக்க வேண்டும் என்று கடந்த வாரம் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியிருந்தாா். இந்நிலையில், அவரது இந்தக் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் யாவும் கடந்த 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த நிலையிலேயே தொடா்வதற்கு ‘வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991’ வகை செய்கிறது. அதேபோல், எந்தவொரு கோயிலை மசூதியாக மாற்றுவதையும், மசூதியை கோயிலாக மாற்றுவதையும் இந்தச் சட்டம் தடை செய்கிறது.

இந்நிலையில், அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரி பிரதமா் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது:

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தில், குறிப்பாக பிரிவு (4)-இல் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும். அந்தப் பிரிவு, ஒருவரது வழிபடும் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையை பாதிப்பதாக உள்ளது.

நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசால் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்றத்தாலோ, அல்லது நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டத்தாலோ அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளில் திருத்தம் கொண்டுவரவோ, மாற்றம் செய்யவோ முடியாது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 25 மற்றும் 26-இன் கீழ் ஒருவருக்கு இருக்கும் வழிபாட்டுச் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையில் ஆதிக்கம் செலுத்த இயலாது. எனவே, வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com