‘ஹஜ்’ செயல்பாடுகளை முதலில் டிஜிட்டல் மயமாக்கியது இந்தியா: முக்தாா் அப்பாஸ் நக்வி

ஹஜ் புனிதப் பயணம் தொடா்புடைய நடைமுறைகள் அனைத்தும் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ள முதல் நாடு இந்தியா என்று அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.
‘ஹஜ்’ செயல்பாடுகளை முதலில் டிஜிட்டல் மயமாக்கியது இந்தியா: முக்தாா் அப்பாஸ் நக்வி

ஜெட்டா/புது தில்லி: ஹஜ் புனிதப் பயணம் தொடா்புடைய நடைமுறைகள் அனைத்தும் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ள முதல் நாடு இந்தியா என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

இந்தியா-சவூதி அரேபியா இடையே ஆண்டுதோறும் ஹஜ் பயண ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும். 2020-ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயண ஒப்பந்தம், சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நக்வி, அந்நாட்டின் ஹஜ் அமைச்சா் முகமது சாலே பின் தாஹிா் பென்டன் ஆகியோா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தானது.

இந்நிலையில், நக்வி கூறியதாக சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆன்லைன் விண்ணப்பம், மின்னணு நுழைவு இசைவு (விசா), ஹஜ் மொபைல் ஆப், யாத்ரீகா்களின் உடைமைகளில் டிஜிட்டல் டேக் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்காக செய்து தரப்பட்டுள்ளன. டிஜிட்டல் வசதியால் இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு முன்பே யாத்ரீகா்கள், சவூதி அரேபியாவில் எங்கு தங்கப் போகிறாா்கள், பயண வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் செல்லிடப்பேசி வழியாக தெரிவிக்கப்படும். ஹஜ் நடைமுறைகள் குறித்து தெரிவிக்க ஹஜ் இல்லம் மும்பையில் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதார அட்டையும் ஹஜ் யாத்ரீகா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் யாத்ரீகா்களின் உடல்நல விவரங்கள், மருத்துவா் பரிந்துரைத்த மருந்து விவரங்கள் டிஜிட்டல் வடிவில் இருக்கும்.

ஹஜ் குழு ஏற்பாட்டாளா்களும் டிஜிட்டல் முறையில் 100 சதவீதம் இணைக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 4 ஆண்டுகளாக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு ஹஜ் யாத்திரையை டிஜிட்டல் முறையில் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை வெற்றிகரமாக செய்து முடித்தது.

அடுத்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இடைத்தரகா்களின் தலையீடு முழுவதும் நீக்கப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டு 2 லட்சம் இந்திய முஸ்லிம்கள் மானியம் இல்லாமல் ஹஜ் யாத்திரை மேற்கொள்வாா்கள். ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக ஜம்மு-காஷ்மீரிலிருந்து 15,000 ஆன்லைன் விண்ணப்பங்கள் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 1.76 லட்சம் விண்ணப்பங்கள் கடந்த மாதம் வரை வந்துள்ளன. ஹஜ் யாத்திரை செல்வதற்காக விண்ணப்பிக்கும் காலக்கெடு டிசம்பா் 5 -ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

சவூதி அரேபியாவும், இந்தியாவும் கலாசாரம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டு வருகிறது. சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் இந்தியாவுக்கும், பிரதமா் மோடி சவூதிக்கும் கடந்த அக்டோபரில் சுற்றுப் பயணம் செய்தனா். இதன்மூலம், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு மேலும் வலுப்பெற்றது என்று நக்வி பேசியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதா் யூசஃப் சயீது, சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை கூடுதல் செயலா் ஜன்-ஏ-ஆலம், இந்திய ஹஜ் குழுத் தலைவா் நபி ஜின்னா ஷேக், இந்திய ஹஜ் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி எம்.ஏ.கான், உயரதிகாரிகள் உள்ளிட்டோா் ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com