உ.பி: அரசுப்பள்ளி மதிய உணவில் செத்துக்கிடந்த 'எலி'; மாணவர்கள், ஆசிரியர் மயக்கம்!

உத்தரப்பிரதேசத்தில் அரசுப்பள்ளி 'எலி' செத்துக்கிடந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் பலர் மயக்கமடைந்தனர். 
உ.பி: அரசுப்பள்ளி மதிய உணவில் செத்துக்கிடந்த 'எலி'; மாணவர்கள், ஆசிரியர் மயக்கம்!

உத்தரப்பிரதேசத்தில் 'எலி' செத்துக்கிடந்த மதிய உணவை சாப்பிட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் பலர் மயக்கமடைந்தனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்பர் நகர் மாவட்டம் ஹாபூர் நகரில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு மாணவர்களுக்கான மதிய உணவை ஜான் கல்யாண் சன்ஸ்தா கமிட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. 

இந்நிலையில், இன்று மதிய உணவின் போது, பள்ளியில் வழங்கப்பட்ட பருப்பில் 'எலி' ஒன்று இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதற்கு முன்னரே பல மாணவர்கள் உணவு அருந்தியிருந்தனர். இந்நிலையில், மாணவர்கள் சிலர் வாந்தி எடுக்கவே, 10 குழந்தைகள் மற்றும் ஆசிரியர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பந்தப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய காலங்களில், பள்ளி மாணவர்களின் மதிய உணவு குறித்த சர்ச்சைகளில் உத்தரப்பிரதேச அரசு சிக்கி வருகிறது. கடந்த வாரம், சோனபத்ரா மாவட்டத்தில், பள்ளியில் மதிய உணவு சமையலறையில் ஒரு சமையல்காரர், ஒரு லிட்டர் பாலை ஒரு வாளி தண்ணீருடன் கலந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோன்று கடந்த செப்டம்பர் மாதம், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மாணவர்கள் மதிய உணவுக்கு ரொட்டியும், உப்பும் வழங்கப்பட்ட செய்தியும் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. 

உ.பி மாநிலம் முழுவதும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com