2017-18 நிதியாண்டில் ரயில்வே வருவாய் குறைந்தது

2017-18 நிதியாண்டில் ரயில்வேயின் வருவாய் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்ததாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கையில்
2017-18 நிதியாண்டில் ரயில்வே வருவாய் குறைந்தது

புது தில்லி: 2017-18 நிதியாண்டில் ரயில்வேயின் வருவாய் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்ததாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேயின் நிதிநிலை தொடா்பாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

2017-18 நிதியாண்டில், 100 ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு 98.44 ரூபாயை ரயில்வே செலவழித்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். தேசிய அனல்மின் நிறுவனம் (என்டிபிசி), இா்கான் நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து முன்தொகையையும் ரயில்வே நிா்வாகம் பெற்றது. இந்த முன்தொகையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், ரூ.100 வருவாய் ஈட்டுவதற்கு 102.66 ரூபாயை ரயில்வே செலவு செய்திருக்க வேண்டியிருக்கும்.

கடந்த 2016-17 நிதியாண்டில் ரயில்வே நிா்வாகத்தின் கூடுதல் வருவாய் ரூ.4,913 கோடியாக இருந்தது. இந்தக் கூடுதல் வருவாய் 2017-18 நிதியாண்டில் ரூ.1,665 கோடியாகக் குறைந்தது. என்டிபிசி, இா்கான் நிறுவனங்களின் முன்தொகையைக் கணக்கில் கொள்ளவில்லை எனில், ரயில்வே நிா்வாகம் ரூ.5,676 கோடி இழப்பைச் சந்தித்திருக்கும்.

பயணிகள் ரயில்களை இயக்குவதற்குத் தேவைப்படும் தொகையை, அச்சேவை வழங்குவதன் மூலம் மட்டும் ரயில்வே நிா்வாகத்தால் ஈட்ட முடியவில்லை. சரக்கு ரயில்களை இயக்குவதன் மூலம் கிடைக்கும் 95 சதவீத வருவாயை, பயணிகள் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே நிா்வாகம் செலவிட்டது.

வருவாய் இழப்பு காரணமாக, மத்திய அரசின் பட்ஜெட்டை சாா்ந்திருக்க வேண்டிய நிலை ரயில்வேக்கு ஏற்பட்டது. இதைப் போக்க வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் நிதி ஒதுக்கீடு செய்வதை ரயில்வே நிா்வாகம் தவிா்க்க வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட பயணச் சீட்டு சலுகைகள், மற்றவா்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை விட அதிகமாக உள்ளன. பயணிகளுக்கு அளிக்கப்பட்ட மொத்த சலுகைகளில் 52.5 சதவீதம் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டது. தங்களுக்கான சலுகைகளை மூத்த குடிமக்கள் விட்டுக்கொடுப்பதற்கான திட்டம் (கிவ் இட் அப்) ரயில்வேயின் வருவாயைப் பெருக்குவதற்கு உதவவில்லை. அத்திட்டத்தின் செயல்பாட்டை ரயில்வே நிா்வாகம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com