Delhi gangster Neeraj Bawana
Delhi gangster Neeraj Bawana

ஒரு ஐபாட், எஃப் எம் ரேடியோ, வீட்டில் சமைத்த அசைவ உணவு! பிரபல ரெளடி ஜெயிலரிடம் கேட்ட லிஸ்ட்!

ஒரு ஐபாட், எஃப்.எம் வானொலி மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு (அசைவமாக இருந்தால் நலம்)

ஒரு ஐபாட், எஃப்.எம் வானொலி மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு (அசைவமாக இருந்தால் நலம்)  - இவைதான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி ரெளடி நீரஜ் பவானா போலீஸாரிடம் முன்வைத்த சில கோரிக்கைகள். திகார் ஜெயிலில் தனி செல்லில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால், பொழுது போக்குவதற்கும், பைத்தியம் பிடிக்காமல் இருப்பதற்கும் இந்த பொருட்கள் தனக்குத் தேவை என்று நீரஜ் பவானா  சிறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட நீரஜ், ஏப்ரல் 2015-ல் கைது செய்யப்படும் வரை, தில்லியில் மிகவும் தேடப்பட்டு வந்த ரெளடியாக இருந்தவர்.  தற்போது சிறை எண் 2-ல் அடைக்கப்பட்ட அவர், சிறை கண்காணிப்பாளரிடம் சில கோரிக்கைகளை பட்டியலிட்டுள்ளார்.

இதற்கு முன்னரே சிறைச்சாலை காவல் அதிகாரி ஒருவர் நீரஜிடம் சிறைச்சாலை கையேடு விதிகளின் கீழ் கைதிகளுக்கு இவை எல்லாம் அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறியிருக்கிறார். அந்த அதிகாரி நீரஜ் பவானாவிடம் ஏற்கனவே சிறைச்சாலையின் உள்ள வானொலி சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினார், அங்கு அவர் இசையைக் கேட்க முடியும். திகாரில், கைதிகள் சிறைச்சாலைக்குள் மட்டும் இயங்கக்கூடிய வானொலி சேவையை நடத்துகிறார்கள்.

400  ஏக்கர் பரப்பளவில் உள்ள திகார் சிறை வளாகத்திற்குள் தனிச் சிறைகள் அல்லது சிறைச்சாலைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஏனைய 17,000 கைதிகளைப் போலல்லாமல், பவானா மற்றும் இரண்டு கைதிகள் (அரசியல்வாதியாக மாறிய  கேங்க்ஸ்டர் முகமது ஷாஹாபுதீன் மற்றும் அண்டர் வொர்ல்ட் டான் சோட்டா ராஜன்)  ஆகியோர் மட்டும் தனித்தனி சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்

2011-ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஜோதிர்மய் டேயின் கொலை வழக்கில் ராஜன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார், அதே நேரத்தில் 2004 இரட்டை கொலை வழக்கில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட முகமது ஷாஹாபுதீன் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த மூவரும் அருகருகே உள்ள தனிச்சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர், ஆனால் ஒருவருக்கொருவர் அல்லது வேறு எந்த கைதியுடனும் தொடர்பு கொள்வதற்கு அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீரஜ் பவானா முன்னதாக மற்ற கைதிகளுடன் சிறை எண் 1-இல் தங்க வைக்கப்பட்டார், ஆனால் கடந்த ஆண்டு ராஜன் மற்றும் ஷாஹாபுதீனுக்கு அடுத்துள்ள உயர் பாதுகாப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.  தற்போது அவர் சிறை அதிகாரிகளுக்கு விருப்பப் பட்டியலை கொடுத்ததை அடுத்து, நீரஜ் பவானா தனது கூட்டாளிகளுடன் சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்பு கொண்டுள்ளார் என்பது தெரிய வந்தது.

பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த சிறை அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், 'நீரஜ் பவானா இதற்கு முன்னர் தொலைக்காட்சி மற்றும் தொலைபேசியைக் கேட்டான். அந்தக் கோரிக்கையுடன் நீதிமன்றத்தை அணுகினான். சிறைச்சாலை கையேட்டில் தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி அழைப்பு வசதி இருப்பதைக் கருத்தில் கொண்டுதான் அக்கோரிக்கையை அவன் வலியுறுத்தி வந்தான். ஆனால் அசைவ உணவை வீட்டிலிருந்து வரவழைப்பது, ஐபாட் அல்லது எஃப்எம் வானொலி பயன்பாடுகளை எல்லாம் சிறைக்குள் அனுமதிக்க முடியாது.’ என்றார்.

நீதிமன்றம் மூலம் சிறை அதிகாரிகளுக்கு நீரஜ் அளித்த விண்ணப்பத்தில், தான் ஒரு அசைவ உணவுப் பிரியர் என்றும், சிறை உணவு சைவமாக இருப்பதால் அசைவத்தின் சுவையை மிகவும் இழந்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

2015-ம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக திகார் சிறைச்சாலையின் சட்ட அதிகாரியாக இருந்த சுனில் குப்தா கூறுகையில், 'வீட்டில் சமைத்த உணவை நாங்கள் தடைசெய்தோம், ஏனெனில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் உணவுடன் கடத்தப்பட்டன. சிறை அதிகாரிகள் பரோட்டாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் தாள்களைக் கண்டுபிடித்துள்ளனர். வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட குழம்பில் கஞ்சா உள்ளிட்ட போதை பொட்டலங்களை காவலர்கள் கண்டுபிடித்த சம்பவங்கள் எனக்கு நினைவிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களில் மட்டுமே வீட்டு உணவு அனுமதிக்கப்படுகிறது. 1980-களில் நான் சிறையில் சேருவதற்கு முன்பே அசைவ உணவு தடை செய்யப்பட்டது. அசைவ உணவு வன்முறையை தூண்டுகிறது என்று மூத்த அதிகாரிகள் நம்பியது காரணமாக இருக்கலாம்.’ என்று குப்தா கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com