மாநிலங்களவையிலும் நிறைவேறியது எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதா!

பிரதமர் மற்றும் அவருடன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கு மட்டும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்க வழிவகை செய்யும் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது.
மாநிலங்களவையிலும் நிறைவேறியது எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதா!


பிரதமர் மற்றும் அவருடன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கு மட்டும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்க வழிவகை செய்யும் சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) சட்டத்திருத்த மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்கையில், 

"இந்த சட்டத்தில் இதற்கு முன் 4 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது செய்திருப்பது 5-வது திருத்தமாகும். முதல் 4 திருத்தங்கள் ஒரு குடும்பத்தை மனதில் வைத்து மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த முறை எந்தவொரு குடும்பத்தையும் மனதில் வைத்து திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.

ஒரு அரசின் தலைவர் என்பதால் பிரதமருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், பிரதமராக அல்லாத ஒருவரும் எஸ்பிஜி பாதுகாப்பை விரும்புகின்றனர். ஜனநாயக நாட்டில் அது நடக்காது.

எஸ்பிஜி பாதுகாப்பில் ஈடுபடுபவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கிடையாது. அவர்கள் இந்த நாட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபவர்கள் தான். இதில் ஈடுபவர்களில் பிஎஸ்எப் வீரர்கள் 33.33 சதவீதம், சிஆர்சிஎஃப் 33.34, சிஐஎஸ்எஃப் 17 சதவீதம், ஐடிபிபி 9.33 சதவீதம், எஸ்எஸ்பி 6 சதவீதம் மற்றும் மாநில காவல் துறையில் இருந்து 1 சதவீதம் ஆவர்" என்றார்.

இந்த விவாதத்தில் பங்கெடுத்த காங்கிரஸ் தலைவர்கள், காந்தி குடும்பத்துக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பை திரும்பப் பெறுவதுதான் அரசின் ஒரே அரசியல் நோக்கம் என குற்றம்சாட்டினர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் உறுப்பினர் மனோஜ் ஜா மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர் பினாய் விஸ்வம் ஆகியோர் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்தனர். அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே. ஹரிபிரசாத் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, பிரியங்கா காந்தி இல்லத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் எழுப்பினர். 

இதற்குப் பதிலளித்த அமித் ஷா, 

"இந்த பாதுகாப்புக் குறைபாடு குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார். மேலும், பிரியங்கா இல்லத்தில் நிகழ்ந்த சம்பவத்தை விரிவாகவும் அமித் ஷா விவரித்தார். 

அப்போது பேசுகையில்,

"பிரியங்கா காந்தி இல்லத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரியிடம் ராகுல் காந்தி கருப்பு நிற டாடா சஃபாரி காரில் வரலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிடப்பட்ட அந்த நேரத்தில் அதேபோல் கருப்பு நிற டாடா சஃபாரி கார் வந்துள்ளது. அதில் ராகுல் காந்திக்குப் பதிலாக மீரட்டில் இருந்து காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஷர்தா தியாகி, மற்ற கட்சி நிர்வாகிகள் 4 பேருடன் வந்துள்ளார். அதே நேரத்தில் அதே கருப்பு நிற சஃபாரி கார் வந்த காரணத்தினால் மட்டுமே அது அனுமதிக்கப்பட்டது.

தற்போதும் சரி, முன்பும் சரி பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, ராகுல் காந்தி மற்றும் மற்ற குடும்பத்தினர் யாரும் பாதுகாப்பு வளைய ஏற்பாடுகள் மூலம் வரமாட்டார்கள். அதனால், இது தற்செயலாக நடந்தது. நாங்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். இதற்குக் காரணமான மூவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விசாரணையை மிகவும் மூத்த காவல் ஆய்வாளர் ஒருவர் விசாரித்து வருகிறார்" என்றார்.

இருந்தபோதிலும், அமித் ஷாவின் பதில் திருப்தியளிக்காததால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

சிறப்பு பாதுகாப்புப் படை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதன் மூலம், இனி பிரதமர் மற்றும் அவருடன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும்.

முன்னாள் பிரதமர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும். 

ஆனால், முன்னாள் பிரதமர்கள் பதவியிலிருந்து விலகிய 5 ஆண்டுகள் வரை மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு இனி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com