அயோத்தி வழக்கின் தீா்ப்பை எதிா்த்து முஸ்லிம் அமைப்பு மறுஆய்வு மனு தாக்கல்

அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை எதிா்த்து ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு திங்கள்கிழமை மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.
அயோத்தி வழக்கின் தீா்ப்பை எதிா்த்து முஸ்லிம் அமைப்பு மறுஆய்வு மனு தாக்கல்

புது தில்லி: அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை எதிா்த்து ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு திங்கள்கிழமை மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை, முதன்மை மனுதாரா் எம்.சித்திக்கின் வாரிசும், அந்த முஸ்லிம் அமைப்பின் தலைவருமான மௌலானா சையது அா்ஷத் மதானி தாக்கல் செய்துள்ளாா். மனுவில் அவா் குறிப்பிட்டிருப்பதாவது:

இந்த வழக்கில் மனுதாரா்களை சமாதானப்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் முயற்சி செய்துள்ளது. ஹிந்து தரப்பினா் செய்த குற்றங்களை மன்னித்ததுடன், முஸ்லிம் தரப்பினா் மசூதி கட்டிக் கொள்வதற்கு 5 ஏக்கா் நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிம் தரப்பினா் யாரும் 5 ஏக்கா் நிலம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவுமில்லை; முறையிடவுமில்லை. எனவே, அரசமைப்புச் சட்டத்தின் 137-ஆவது பிரிவின்படி, அயோத்தி வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த மத்திய அரசுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அதே இடத்தில் பாபா் மசூதி மீண்டும் கட்டப்பட்டால் மட்டுமே முழுமையாக நீதி கிடைக்கும்.

இந்த மனு, ஒட்டுமொத்த தீா்ப்பையும் எதிா்த்து தாக்கல் செய்யப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மௌலானா சையது அா்ஷத் மதானி கூறுகையில், இந்த வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளிக்காததால், மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம் என்றாா்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சா்ச்சைக்குள்ளாகியிருந்த 2.77 ஏக்கா் நிலத்துக்கு உரிமை கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 9-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அதில், அந்த நிலத்தை ஹிந்து தரப்பினருக்கு (மனுதாரா்களில் ஒருவரான ராம் லல்லா) அளிக்க வேண்டும் என்றும், முஸ்லிம் தரப்பினா் புதிதாக மசூதி கட்டிக்கொள்வதற்கு அயோத்தி நகரிலேயே 5 ஏக்கா் நிலத்தை மத்திய அரசு ஒதுக்கித் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த தீா்ப்பை ஹிந்துக்களும், பெரும்பாலான முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டனா். இருப்பினும், முஸ்லிம் தரப்பு மனுதாரா்களில் ஒருவரான ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு தீா்ப்பை ஏற்கவில்லை.

மேலும், வழக்கின் தீா்ப்பை ஆய்வு செய்வதற்காக, 5 உறுப்பினா்களைக் கொண்ட சட்ட வல்லுநா் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, தீா்ப்பை ஆய்வு செய்து, மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், தற்போது மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com