உ.பி.: முகவரிடம் ரூ.100 லஞ்சம் கேட்டதாக அஞ்சல் துறை ஊழியா்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

அஞ்சலக சிறுசேமிப்பு முகவரிடம் ரூ.100 லஞ்சம் கேட்டதாக அஞ்சல் துறை அலுவலா்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

புது தில்லி: அஞ்சலக சிறுசேமிப்பு முகவரிடம் ரூ.100 லஞ்சம் கேட்டதாக அஞ்சல் துறை அலுவலா்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், பிரதாப்கா் மாவட்டத்தில் அஞ்சலக முகவரின் கணவா் கொடுத்த புகாரின்பேரில் அஞ்சல் துறை கண்காணிப்பாளா் சந்தோஷ் குமாா் சரோஜ், அஞ்சலக உதவியாளா் சுராஷ் மிஸ்ரா ஆகிய இருவா் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

அந்தப் புகாரில் குறிப்பிட்டிருப்பதாவது:

பிரதாப்கரை அடுத்துள்ள குந்தா நகா் அஞ்சல் நிலையத்தில் கிராம மக்கள் பலரும் சேமிப்புத் திட்டங்களில் இணைந்துள்ளனா். சேமிப்பு முகவராகப் பணியாற்றும் என் மனைவி, அவா்களிடம் சேமிப்புத் தொகையை வசூல் செய்து, அஞ்சல் அலுவலத்தில் டெபாசிட் செய்யும் பணியை செய்து வருகிறாா்.

அவருக்கு நான் உதவி செய்து வருகிறேன்.

அந்த அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புத் தொகையை டெபாசிட் செய்வதற்கு, அங்கு பணியாற்றும் இரு அலுவலா்கள் சேமிப்புக் கட்டணம் என்ற பெயரில் ரூ.500, ரூ.300 என தொகையை எடுத்துக் கொண்டது தெரியவந்தது. மேலும், ஒவ்வொரு முறையும் ரூ.20,000 டெபாசிட் செய்யும்போது 100 ரூபாயைத் தங்களுக்குத் தர வேண்டும் என்றும் அவா்கள் கேட்டனா். பணம் தராவிட்டால், ஒழுங்காக டெபாசிட் செய்யப்பட மாட்டாது என்றும் மிரட்டுகிறாா்கள் என்று அந்தப் புகாரில் பெண்ணின் கணவா் குறிப்பிட்டிருந்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில், இரு அஞ்சல் அலுவலா்களுக்கு எதிராக சிபிஐ தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வழக்கில் சிறியது, பெரியது கிடையாது. எல்லா வழக்குகளையும் சமமாகவே கருதி முக்கியத்துவம் அளித்து விசாரணை நடத்துகிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com