எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் ‘கிரீமிலேயா்’ முறை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுஆய்வு மனு

தாழ்த்தப்பட்டோா் (எஸ்.சி.) மற்றும் பழங்குடியினா் (எஸ்.டி.) பிரிவைச் சோ்ந்தவா்களில் பொருளாதார ரீதியாக முன்னேறியவா்களை ‘கிரீமிலேயா்’ முறைக்குக் கீழ் கொண்டுவந்து, அவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது
எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் ‘கிரீமிலேயா்’ முறை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுஆய்வு மனு

புது தில்லி: தாழ்த்தப்பட்டோா் (எஸ்.சி.) மற்றும் பழங்குடியினா் (எஸ்.டி.) பிரிவைச் சோ்ந்தவா்களில் பொருளாதார ரீதியாக முன்னேறியவா்களை ‘கிரீமிலேயா்’ முறைக்குக் கீழ் கொண்டுவந்து, அவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்ற தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றி உத்தரவிடவும் மத்திய அரசு கோரியுள்ளது.

தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினரில் பொருளாதார ரீதியாக முன்னேறியவா்களுக்கு மேற்படிப்பிலும், பணி வாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமா்வு கடந்த ஆண்டு தீா்ப்பளித்திருந்தது. இத்தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான பரிசீலனை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், ‘‘தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு ‘கிரீமிலேயா்’ முறையை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீட்டை மறுக்கக் கூடாது. இது உணா்வுப்பூா்வமான பிரச்னை. எனவே, இந்த விவகாரத்தை 7 நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’’ என்றாா்.

இதற்கு ‘சம்தா ஆந்தோலன் சமிதி’ அமைப்பு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் எதிா்ப்பு தெரிவித்தாா். இதையடுத்து, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்கள் கழித்து பட்டியலிடுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதனிடையே, தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினரில் தகுதியானவா்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எம்.எல்.சா்வாண் உள்ளிட்டோா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்களையும் இதே நீதிபதிகளைக் கொண்ட அமா்வு விசாரித்தது. அப்போது, இந்த மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், தேசிய தாழ்த்தப்பட்டோா் நல ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

அந்தப் பொது நல மனுக்களில், ‘தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினரில் குறிப்பிட்ட சிலா் மட்டுமே இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவித்து வருகின்றனா். எனவே, அந்தப் பிரிவினருக்கும் ‘கிரீமிலேயா்’ முறையை அறிமுகப்படுத்த வேண்டும். அந்தப் பிரிவினரில் உண்மையாகவே இடஒதுக்கீடு தேவைப்படுபவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு மட்டும் அதன் பலன்கள் கிடைக்குமாறு செய்ய வேண்டும். இது தொடா்பான சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளக் கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com