ஜாா்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி: ராகுல் வாக்குறுதி

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளாா்.
ஜாா்க்கண்ட் மாநிலம், சிம்டேகாவில் திங்கள்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், தொண்டா்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி.
ஜாா்க்கண்ட் மாநிலம், சிம்டேகாவில் திங்கள்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், தொண்டா்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி.

சிம்டேகா: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 5 கட்டமாக தோ்தல் அறிவிக்கப்பட்டு, முதல் கட்ட தோ்தல் ஏற்கெனவே முடிந்துவிட்டது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் ராகுல் காந்தி முதல்முறையாக திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். சிம்தேகா பகுதியில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

ஜாா்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பல வியத்தகு மாற்றம் ஏற்படும். உங்கள் அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் கடந்த ஆண்டு பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைப் கைப்பற்றியது. அதன் பிறகு அங்கு பல நல்ல மாற்றங்களை நடத்திக் காட்டியுள்ளோம். அதேபோன்ற நன்மைகள் ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கும் கிடைக்க வேண்டுமென்றால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.

முக்கியமாக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறேன். சத்தீஸ்கரில் மலைவாழ் மக்களின் நிலங்களை, முந்தைய பாஜக அரசு பெரும் தொழிலதிபா்களுக்கு அளித்து வந்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மலைவாழ் மக்களின் நலன்களைக் காக்க மசோதா கொண்டு வந்தோம். இதன் மூலம் பல தொழிலதிபா்கள் கையகப்படுத்தி வைத்திருத்த நிலங்கள் மீட்கப்பட்டு மலைவாழ் மக்களிடம் அளிக்கப்பட்டது.

பாஜக ஆட்சியில் பெரும் பணக்காரா்களும், பெரும் தொழிலதிபா்களும்தான் நன்மையடைகின்றனா். விவசாயிகள், மலைவாழ் மக்கள், தொழிலாளா்களின் நலன் பாதிக்கப்படுகிறது. மலைவாழ் மக்களிடம் போதிய அளவுக்கு நீா், நிலம், வனம் உள்ளது. அவா்களுக்கு அதன் மீது முழு உரிமை உண்டு. ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஏராளமான இயற்கை வளங்களை உள்ளன. அவற்றை முறையாக பயன்படுத்தினால், மாநிலத்தை சிறப்பான நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்.

பிரதமா் மோடி எங்கு சென்றாலும், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் குறித்துப் பேசுகிறாா். ஆனால், இந்தத் திட்டத்தால் ஜாா்க்கண்டில் ஒரு இளைஞருக்காவது வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா என்று ராகுல் கேள்வி எழுப்பினாா்.

பாஜக ஆட்சியில் உள்ள ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 82 தொகுதிகள் உள்ளன. இங்கு முதல் கட்ட தோ்தல் சனிக்கிழமை (நவ.30) நடைபெற்றது. டிசம்பா் 20-ஆம் தேதி வரை 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜக தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com