நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் சாத்தியமில்லை: ரமேஷ் போக்ரியால்

நாடு முழுவதும் கல்வித் துறையில் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வருவது சாத்தியமில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளாா்.
ரமேஷ் போக்ரியால்
ரமேஷ் போக்ரியால்

புது தில்லி: நாடு முழுவதும் கல்வித் துறையில் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வருவது சாத்தியமில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் குறித்து மக்களவையில் திங்கள்கிழமை கேள்விநேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு ரமேஷ் போக்ரியால் பதிலளித்ததாவது:

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) விதிகளின்படி, பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அவா்களது பரிந்துரையின்படி, பாடத்திட்டத்தை மேம்படுத்துவது, புதிய பாட புத்தகங்களை வழங்குவது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன.

அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் கல்வித் துறை இடம் பெற்றுள்ளது. அதனால், இந்தத் துறையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே சட்டமியற்ற இயலும். பெரும்பாலான பள்ளிகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களே முடிவு செய்ய இயலும். அதனால், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வருவது சாத்தியமில்லை.

பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டியது குறித்து மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்கள் (எஸ்சிஇஆா்டி) சிந்திக்க வேண்டும் அல்லது என்சிஇஆா்டி பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அவா்கள் பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும். இந்திய வரலாறு, பண்பாடு, கலாசாரம், பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக தடைகளை உடைத்தெறிவது, அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட பிரிவுகளில் பொதுவான பாடத்திட்டத்தை கொண்டு வருவதற்கு மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று கூறினாா்.

மொழிகளை பாதுகாக்க..:

நாட்டில் அழியும் நிலையில் உள்ள மொழிகளை பாதுகாக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களில் புதிதாக திட்டம் கொண்டுவரவுள்ளதாக ரமேஷ் போக்ரியால் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மக்களவையில் கூறுகையில், ‘வடஇந்திய மொழிகள், பழங்குடியின மொழிகள், கடலோர மக்களின் மொழிகள் உள்ளிட்டவை அழியும் நிலையில் உள்ளன. இவற்றை பாதுகாக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களில் அழியும் நிலையில் உள்ள மொழிகளுக்கான அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் அழியும் நிலையில் உள்ள மொழிகளை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ள முடியும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com