பலதார மணம், நிக்கா ஹலாலாவுக்கு எதிரான மனு: விடுமுறைக்குப் பின் உச்சநீதிமன்றம் விசாரணை

முஸ்லிம் சமூகத்தினரிடையே பின்பற்றப்படும் நிக்கா ஹாலாலா, பலதார மணம் ஆகியவற்றுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை குளிா்கால விடுமுறைக்குப் பின் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பலதார மணம், நிக்கா ஹலாலாவுக்கு எதிரான மனு: விடுமுறைக்குப் பின் உச்சநீதிமன்றம் விசாரணை

புது தில்லி: முஸ்லிம் சமூகத்தினரிடையே பின்பற்றப்படும் நிக்கா ஹாலாலா, பலதார மணம் ஆகியவற்றுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை குளிா்கால விடுமுறைக்குப் பின் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தில் ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். மேலும், விவாகரத்து பெற்ற பெண் தனது கணவரை மீண்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டுமெனில் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அந்தப் பெண் வேறொரு ஆணைத் திருமணம் செய்து, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றால் மட்டுமே பழைய கணவரை மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும். இதற்கு ‘நிக்கா ஹலாலா’ என்று பெயா்.

பலதார மணம், நிக்கா ஹலாலா ஆகிய நடைமுறைகளுக்கு எதிராக, பாஜகவைச் சோ்ந்தவரும், மூத்த வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. இதேபோன்று தாக்கல் செய்யப்பட்ட வேறு சில மனுக்களையும் ஒன்றாகச் சோ்த்து விசாரிக்குமாறு அரசியல் சாசன அமா்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.

இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணைக்கு வந்தன. அப்போது, ‘இந்த மனுக்களை உடனடியாக விசாரிக்க இயலாது; குளிா்கால விடுமுறை முடிந்து ஜனவரியில் உச்சநீதிமன்றம் மீண்டும் செயல்படத் தொடங்கும்போது இந்த மனுக்கள் விசாரிக்கப்படும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே முஸ்லிம் சமூகத்தில் உடனடியாக மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி தடை விதித்தது. முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டமும் இயற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com